பாஜக மெஜாரிட்டி பெறாவிட்டால் சீக்ரெட் ஆப்ரேஷன் நடத்தி கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்போம் என பாஜக தலைவர் கூறியுள்ளார்.
பல்வேறு விருவிருப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல், கடந்த 10ம் தேதி கர்நாடகா சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. நாளை (13ம் தேதி) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை வாய்ப்பிருப்பதாக ஒரு சில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறினாலும், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் மாநிலத்தில் மீண்டும் தொங்கு சட்டசபை அமையும் என கூறியுள்ளது.
அப்படி தொங்கு சட்டசபை அமைந்தால், கர்நாடகாவில் மூன்றாவது முக்கிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் தான் முக்கிய பங்கை வகிக்கும் என கூறப்படுகிறது. கடந்த முறை போலவே குமாரசாமி கிங்மேக்கராக உருவெடுப்பார் எனவும் அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து குமாரசாமி முதல்வரானார். அதேபோல் தான் இந்த முறையும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தான் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளன. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 113 தொகுதிகளை வெல்லும் கட்சியே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது. இந்தநிலையில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறாவிட்டால், சீக்ரெட் ஆப்ரேஷனை தொடங்குவோம் என பாஜக தலைவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா பாஜக வருவாய்துறை அமைச்சர் ஆர்.அசோகா இன்று பிரபல கன்னட செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘இந்த ஆண்டு வெற்றி வாகையை சூடப்போவது பாஜக தான். அதில் துளியளவும் சந்தேகம் இல்லை. நாங்கள் பெரும்பான்மையுடன் வெற்றி அடையாவிட்டாலும், பாஜக தான் ஆட்சி அமைக்கும். எப்படி அமைக்கும், எப்போது ஆட்சியை கைப்பற்றும் என்பதை பொறுத்து இருந்து பாருங்கள். காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றால், தலைமையின் வழிகாட்டுதல் படி சீக்ரெட் ஆப்ரேஷனை நடத்தி ஆட்சியை பிடிப்போம்’’ என அவர் கூறியுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் பெற்றது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு அந்த கூட்டணி கட்சியில் இருந்த எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவினர். அப்படி எம்எல்ஏக்கள் தங்கள் பக்கம் வருவதற்கு பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக பாஜக மீது குற்றம்சாட்டப்பட்டது. இருப்பினும் 120 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பாஜக 2019ல் ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடதக்கது. அதேபோல் தான் தற்போதும் மெஜாரிட்டி இல்லை என்றால் ஆப்ரேஷன் தொடங்குவோம் என பாஜக தலைவர் கூறியிருப்பது பேசு பொருளாகியுள்ளது.