பெங்களூரு: 138 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே 55 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார். 9 முறை எம்எல்ஏவாகவும், 2 முறை எம்பியாகவும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். மத்திய, மாநில அமைச்சர்; சட்டமன்ற, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ் மாநிலத் தலைவர், மாநிலங்களவை குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளை பல முறை வகித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குபின் நேரு குடும்பத்துக்கு வெளியில் இருந்து காங்கிரஸின் தலைமை பொறுப்புக்கு கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடன் உரையாடியதிலிருந்து:
காங்கிரஸ் உறுப்பினராக இருந்த நீங்கள் தேசியத் தலைவராக உயர்ந்துஇருக்கிறீர்கள். அதுவும் ஒரு தென்னிந்திய கிராமத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து எப்படி இவ்வளவு உயரத்தை தொட முடிந்தது?
ஏழை எளிய மக்களுக்காக பாடுபடுவதற்காகவே அரசியலுக்கு வந்தேன். பதவிகளை அடைய வேண்டும் என்பதற்காக நான் எந்த திட்டங்களையும் வகுத்துக்கொள்ளவில்லை. காங்கிரஸில் கடைநிலை தொண்டனாக இருந்த காலக்கட்டத்தில் ராத்திரி பகலாக கட்சிக்காக வேலை செய்திருக்கிறேன். 24 மணி நேரமும் கட்சிக்காகவும் மக்களுக்காகவும் உழைத்தேன். அதனால் தான் 1972 தேர்தலில் இருந்து மக்கள் என்னை தொடர்ந்து வெற்றிப்பெற செய்தார்கள். உண்மையாக உழைத்தால், கொள்கை நேர்மையானதாக இருந்தால் எந்த உயரத்தையும் அடையலாம். அவை தான் என்னை உயர்த்தின.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப்பின் நேரு குடும்பத்துக்கு வெளியில் இருந்து தலைவராகி இருக்கிறீர்கள். சுதந்திரமாக செயல்பட முடிகிறதா? நேரு குடும்பத்தார் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்களா?
நான் சுதந்திரமாக, தன்னிச்சையாக செயல்படுகிறேன். முதலில் ஊடகங்கள் என்னை ரப்பர் ஸ்டாம்ப், ரிமோட் கன்ட்ரோல் என பிராண்ட் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சிக்காக அந்த குடும்பம் எல்லாவற்றையும் தியாகம் செய்திருக்கிறது. கட்சி மோசமான நிலையில் இருந்தபோதெல்லாம் அவர்களே மீட்டுக் கொண்டுவந்திருக்கிறார்கள். சோனியாவும், ராகுலும் காங்கிரஸை வழிநடத்திய அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால், அவர்களையும் கலந்தாலோசித்து கூட்டு முடிவு எடுக்கிறேன்.
கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெறும்? மீண்டும் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இருக்கிறதா?
கடந்த ஒரு மாதமாக கர்நாடகா முழுவதும் பயணித்திருக்கிறேன். கட்சி சாராத மக்களை சந்தித்து பேசி இருக்கிறேன். எங்கள் கட்சியின் சார்பில் 3 சர்வேக்களை நடத்தி இருக்கிறோம். அதன் அடிப்படையில் சொல்கிறேன். காங்கிரஸ் இந்த முறை அமோக வெற்றிபெறும். 130 முதல் 140 இடங்கள் வரை கிடைக்கும். எனவே கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
அப்படியென்றால் காங்கிரஸின் அடுத்த முதல்வர் யார்? இப்போதே சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே மறைமுக போட்டி தென்படுகிறதே?
எந்த தனிநபரும் கட்சியை விட மேலானவர்கள் இல்லை. தேர்தலில் வென்ற பிறகு கட்சி மேலிடம் முடிவெடுக்கும். வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள், மாநில தலைமை கலந்து பேசி முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள். இப்போதே அடுத்த முதல்வர் யார்? என விவாதிப்பது அவசியமற்றது.
முதல்வர் பதவிக்கு டி.கே.சிவகுமார் உங்கள் பெயரை பரிந்துரை செய்திருக்கிறாரே? தலித் முதல்வர் முழக்கம் மீண்டும் எழுந்திருக்கிறதே?
இதில் என் பெயரை ஏன் கூறினார் என தெரியவில்லை. முதல்வர் போட்டியில் நான் இல்லை. நான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர். பல மாநிலங்களின் முதல்வர்களை நியமிக்கும் அதிகாரத்தில் இருக்கிறேன். நான் ஏன் மீண்டும் ஒரு மாநிலத்தின் முதல்வராக வேண்டும்? அப்புறம், என்னை தலித் வட்டத்துக்குள் அடைப்பது நியாயமற்றது. நான் பிறரைவிட கட்சிக்கு உழைத்தவன். கடந்த காலங்களில் மற்றவர்களை காட்டிலும், முதல்வர் பதவிக்கு தகுதியானவனாகவே இருந்திருக்கிறேன். ஆனால் இப்போது அந்த போட்டியில் நான் இல்லை.
ராகுல் காந்தி வழக்கில் சிக்கி இருக்கிறார். சில எதிர்க்கட்சிகளும் நேரு குடும்பத்தினரை பிரதமர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என கூறி இருக்கிறார்கள். அப்படியென்றால் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் நீங்கள் தானே? ‘முதல் தலித் பிரதமர்’ உங்கள் வாயிலாக சாத்தியமாகுமா?
இப்போது அதைப் பற்றி பேச வேண்டாம். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எங்களிடம் வேறு சில வியூகங்கள் இருக்கின்றன. காங்கிரஸின் தலைவர் என்ற முறையில் என் கட்சியை மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு கொண்டுவருவது என் பொறுப்பு.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறீர்கள். ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை இன்னும் வெளியிடாமல் இருக்கிறீர்களே?
நாங்கள் பெரிய அளவில் பணம் செலவழித்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினோம். அதன் முடிவுகளை வெளியிடும் சமயத்தில் எதிர்ப்பு எழுந்தது. அதற்குள் தேர்தல் வந்துவிட்டதால் வெளியிடவில்லை. இப்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவும் அதனை வெளியிடவில்லை. மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, தேசிய அளவிலான புள்ளி விபரங்களை வெளியிடட்டும். அப்போது தான் நாட்டில் சமூகநீதியை நிலைநாட்ட முடியும். பின்தங்கிய வகுப்பினருக்கான சிறப்பு திட்டங்களை தீட்ட முடியும்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
கர்நாடக தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தேசிய அளவிலான அரசியல் சூழ்நிலையை தலைகீழாக மாற்றிவிடும். காங்கிரஸின் வெற்றி, அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருக்கும். எதிர்க்கட்சிகள் சிறு முரண்களை கடந்து ஓரணியில் திரளும். இப்போது காங்கிரஸின் தலைமையை ஏற்க மறுப்போரும் அப்போது மனம் மாறி விடுவார்கள்.
ஒரு காலத்தில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், இப்போது மிகவும் நலிந்து போய் இருக்கிறது. கட்சியை மீண்டும் வலுப்படுத்த என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?
50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் பெரும் பலத்தோடு இருந்தது. காமராஜ், எல்.இளையபெருமாள் போன்ற தலைவர்களை சந்தித்திருக்கிறேன். அந்த காலத்து தலைவர்களெல்லாம் கட்சியை வளர்த்தெடுத்தார்கள். இப்போது மீண்டும் கட்சிக்கு புத்துயிரூட்ட வேண்டிய நேரம் வந்திருக்கிறது. 2024 தேர்தலுக்கு முன்னர் தேசிய அளவில் உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி, பிளாக் கமிட்டி, மாவட்ட கமிட்டி, மாநில கமிட்டி, தேசிய அளவிலான பொறுப்புகள் எல்லாமே மாற்ற வேண்டியுள்ளது. கர்நாடக தேர்தலுக்கு பின், அந்த வேலைகள் தொடங்கும்.
கர்நாடகாவில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்கள் வாழும் நிலையில், ஒரே ஒருவருக்கு மட்டும் சீட் கொடுத்திருக்கிறீர்கள். இந்திரா காந்தி காலத்தில் இருந்து கோலார் தங்கவயலில் இந்திய குடியரசு கட்சி வேட்பாளரையே காங்கிரஸ் ஆதரிக்கும். ஆனால் இப்போது தனியாக வேட்பாளரை நிறுத்தியுள்ளீர்கள். இதனால் கர்நாடகாவில் தமிழர் எம்எல்ஏ ஆக முடியாத நிலை நிலவுகிறதே?
கர்நாடக தமிழர்களுக்கும் காங்கிரஸூக்கும் மிக நீண்ட உறவு இருக்கிறது. தொகுதியில் வெற்றி வாய்ப்பின் அடிப்படையிலேயே வேட்பாளர்களை நிறுத்துகிறோம். தகுதியானவர்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்படும். கோலார் தங்கவயல் தொகுதியை பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் தமிழ் தொழிலாளர்கள். அதனால் முன்பு சி.எம்.ஆறுமுகத்துக்கு ஆதரவு அளித்தோம். அவரும் காங்கிரஸ் தலைவர்களுடன் நல்ல நட்பில் இருந்தார். அவருக்கு பின் வந்தவர்கள் எங்களோடு தொடர்பில் இல்லை.