பெங்களூரு: கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமைய இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தங்கள் கட்சி காங்கிரசுக்கு ஆதரவு தரும் என்று கல்யாண் ராஜ்ஜிய பிரகதி கட்சி அறிவித்துள்ளது.
முன்னாள் பாஜக அமைச்சரும், பின்னர் அதில் இருந்து பிரிந்து கல்யாண் ராஜ்ஜிய பிரகதி என்ற தனிக்கட்சி தொடங்கியவருமான ஜனார்த்தன ரெட்டி, வெள்ளிக்கிழமை பெல்லாரியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கட்சி 10 முதல் 13 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும். நான் கங்காவதி தொகுதியில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். பெல்லாரியில் என் மனைவி நிச்சயம் வெற்றி பெறுவார்.
பாஜக எங்களை ஏற்காததாலேயே நான் தனிக்கட்சி தொடங்கினேன். எனவே அவர்களோடு மீண்டும் இணைய மாட்டேன். தேர்தலுக்குப் பின்பு அவர்களை ஆதரிக்கவும் மாட்டேன். காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டால் பரிசீலனை செய்வோம். சித்தராமையா முதல்வராக இருந்தால் நாங்கள் ஆதரவு வழங்குவோம்” என ஜனார்த்தன ரெட்டி தெரிவித்தார். கர்நாடகாவிலுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த புதன்கிழமை (மே 10) வாக்குப்பதிவு நடைபெற்றது. நாளை (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.