குரூப் 1​ உத்தேச வினா விடை குறித்த விவகாரம் – டிஎன்பிஎஸ்சிக்கு அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை.!

குரூப் 1​ உத்தேச வினா விடை குறித்த விவகாரம் – டிஎன்பிஎஸ்சிக்கு அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை.!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த லஷ்மணகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் “நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன். பட்டப்படிப்பு முடித்துள்ளேன். தமிழகத்தில் கடந்த 21.07.2022 அன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு 92 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. அதற்கான முதல் நிலை தேர்வு கடந்த 19.11.2022 அன்று நடைபெற்றது.

இந்தத் தேர்வு முடிந்து சுமார் 10 நாட்களுக்கு பின்பு உத்தேச வினா விடை வெளியிடப்பட்டு, அதில் தவறு இருந்தால் இது குறித்து 7 நாட்களில் டிஎன்பிஎஸ்சிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

அதன் படி நான், 19 கேள்விகளின் விடை தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஆதாரத்துடன் விண்ணப்பித்தேன். இதற்கு வல்லுநர் குழு எந்த பதிலும் தரவில்லை. இந்த நிலையில் கடந்த 28.04.2023 அன்று முதல் நிலைத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.

உத்தேச வினா விடை குறித்து நான் அளித்த விண்ணப்பம் தொடர்பாக வல்லுநர் குழு எந்த பதிலும் வழங்காமல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதால் என்னை போன்றோர் தகுதி பெறவில்லை.

ஆகவே, எனது ஆட்சேபனை விண்ணப்பம் குறித்த இறுதி வினா விடை பட்டியல் வெளியிட்ட பிறகு குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். ஏற்கெனவே வெளியிடப்பட்ட முடிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும். 

மேலும் வல்லுநர் குழுவினை உயர்கல்வி துறை மூலம் நியமிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.