சென்னை:“ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பை வரவேற்கிறேன். அரவிந்த் கேஜ்ரிவாலின் நீண்ட போராட்டத்துக்கு பலன் கிடைத்துள்ளது” என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பை வரவேற்கிறேன்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் நீண்ட போராட்டத்துக்கு பலன் கிடைத்துள்ளது. டெல்லி குடிமக்களுக்கு சேவை செய்வதில் அவர் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, யூனியன் பிரதேசமான டெல்லியின் சட்டம் – ஒழுங்கு மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லியில் தற்போது முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நிர்வாகம் தொடர்பாக அரசுக்கும், டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன.
இது தொடர்பாக 2015-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 2016-ல் ஆளுநருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, டெல்லி துணைநிலை ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரமும் உள்ளது. டெல்லி அரசின் அறிவுரைப்படியே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும். இவ்வாறு அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.