ஷாருக்கான் மகனை கைது செய்த சமீர் வாங்கடே மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் ஷாருக்கான். வெளிநாடுகளில் இந்திய சினிமா என்றாலே பாலிவுட் தான் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் வெளிநாட்டு மக்களுக்கு பரிச்சயமான முகமாக ஷாருக்கான் உள்ளார். இந்த சூழலில் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தது முதலே இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு, வன்முறை அதிகரித்து வருவதாக எதிர்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அந்தவகையில் ஷாருக்கானையும் குறிவைத்து வெறுப்பு பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவர் நடித்து வெளியான படங்களை பார்ப்பதை தவிர்க்குமாறு இந்துத்துவவாதிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். சமீபத்தில் வெளியான பதான் படத்தை கூட தடை செய்ய வேண்டும் எனவும் பாஜக ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் சமீபத்தில் வெளியான பாலிவுட் படங்களில் அதிக வசூலான படம் என்ற பெயரை பதான் திரைப்படம் பெற்றது.
இந்தநிலையில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானும் வலதுசாரிக்களால் குறிவைக்கப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் ஆர்யன் சென்றபோது போதைப் பொருள் வைத்திருந்ததாக கூறி போதைப் பொருள் தடுப்பு முகமை அதிகாரி சமீர் வாங்கடே என்ற அதிகாரியால் கைது செய்யப்பட்டார். 22 நாட்கள் சிறையில் இருந்த மகனை பார்க்க கூட ஷாருக்கானுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதையடுத்து போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஆர்யன் கானை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஷாருக்கான் மகனை கைது செய்த சமீர் வாங்கடே நேர்மையான அதிகாரியாக பிரபலப்படுத்தப்பட்டார். இந்தசூழலில் அதே சமீர் வாங்கடே மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது இன்றைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
ஆர்யன் கானை வழக்கில் சேர்க்காமல் இருக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக சமீர் வாங்கடே உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் மீது சிபிஐ இன்று வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் டெல்லி, மும்பை, ராஞ்சி, லக்னோ, கௌகாத்தி மற்றும் சென்னை உள்ளிட்ட 30 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது.