புதுடெல்லி: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 12) மதியம் வெளியானது. இதில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
மத்திய அரசின் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10.45 மணிக்கு வெளியானது. இதனைத் தொடர்ந்து சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தாண்டுக்கான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தொடங்கி மார்ச் 21-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தாண்டு 19 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதாக செய்திநிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய 2019-ம் ஆண்டு தேர்ச்சி விகிதமான 91.10 சதவீதத்தைவிட, இந்தாண்டு சிறப்பான வகையில் 93.12 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
12-ம் வகுப்பினைப் போலவே, 10-ம் வகுப்பு முடிவுகளிலும் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றம் இடங்களை வழங்கும் நடைமுறையை சிபிஎஸ்இ செய்யப்போவதில்லை, என்ற போதிலும் பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 0.01 சதவீத மாணவர்களுக்கு தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும்
தேர்வு முடிவுகள் இணைப்பு சிபிஎஸ்இ இணையதளத்தில் நேரடியாக கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் cbseresults.nic.in மற்றும் cbse.gov.in தளங்களில் சென்று தேர்வு முடிவுகளைப் பார்த்துக்கொள்ளலாம். மாணவர்களின் வசதிக்காக தேர்வு வாரியம் மூன்று இணைப்புகளை வழங்கியுள்ளது. அவைகளில் சென்று தனியாக திறக்கும் பக்கத்தில் சில தகவல்களை உள்ளீடு செய்தபின் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.