சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பங்காரு தெருவில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் அரசு நடுநிலைப் பள்ளியில் 115 மாணவர்கள் படித்து வருகின்றனர். மிகப் பழமையான இந்த பள்ளியை இடித்துவிட்டு புதிய பள்ளி கட்டிடத்தை கட்டி தருவதாக கூறி அங்கு பயிலும் மாணவர்களை மற்ற பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
அதன் பிறகு பழமையான மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை இடித்துவிட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான தீர்மானம் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டு அதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது. அதன் பிறகு திமுக கவுன்சிலர் மதன்மோகன் சென்னை மாமன்றத்திற்கு திருமண மண்டபம் தான் வேண்டும் என மக்கள் விரும்புவதாக கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்.
அதனை ஏற்றுக் கொண்ட சென்னை மாநகராட்சி திருமண மண்டபம் கட்டுவதற்கான ஆணையையும் பிறப்பித்துள்ளது. பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய பள்ளி கட்டிடத்தை கட்டி தருவதாக கூறி பள்ளி மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றிவிட்டு திருமண மண்டபம் கட்டுவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அறப்போருக்கு இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காணொளியோடு பதிவிடப்பட்டுள்ளது.
அந்த பதிவில் “மாணவர்களை ஏமாற்றி வேறு பள்ளிகளுக்கு விரட்டி விட்ட பிறகு அந்த கட்டிடத்தை இடித்து அங்கே கல்யாண மண்டபம் கட்ட போகிறோம் என்று மாணவர்களை மோசடி செய்த திமுக கவுன்சிலர் மதன்மோகன் மீது அந்த தொகுதி எம்எல்ஏ மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? தன்னுடைய தொகுதியில் ஒரு அரசு பள்ளியை இடித்து கல்யாண மண்டபம் கட்டப்படுவதை அவர் ஏற்றுக் கொள்கிறாரா?
பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதாக மாநகராட்சி கவுன்சிலில் அனுமதி பெற்று புதிய பள்ளி கட்ட டெண்டர் விடப்பட்டு முடிந்த பிறகு புதிய பள்ளி கட்டுவதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறைத்து புதிய கல்யாண மண்டபம் கட்ட தீர்மானம் போடும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இனியாவது விழித்து எழுந்து பேசுவாரா? மீண்டும் பள்ளிக் கட்டிடம் கட்டப்படுவதை உறுதி செய்வாரா?” என அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
பழைய பள்ளியை இடித்து விட்டு புதிய பள்ளி கட்டி தருகிறோம் என்று மாணவர்களை ஏமாற்றி வேறு பள்ளிகளுக்கு விரட்டி விட்ட பிறகு அந்த கட்டிடத்தை இடித்து அங்கே கல்யாண மண்டபம் கட்ட போகிறோம் என்று மாணவர்களை மோசடி செய்த திமுக கவுன்சிலர் @Madhanmohandmk மீது அந்த தொகுதி MLA மற்றும் அமைச்சர்… pic.twitter.com/xnZwlomfPs
— Arappor Iyakkam (@Arappor) May 11, 2023