ட்விட்டரின் புதிய சிஇஓ லிண்டா யாக்கரினோ – அதிகாரபூர்வமாக அறிவித்தார் எலான் மஸ்க்

வாஷிங்டன்: ட்விட்டரின் புதிய சிஇஓ -வாக அமெரிக்காவைச் சேர்ந்த லிண்டா யாக்கரினோ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அறிவித்துள்ள எலான் மஸ்க், “ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இனி ட்விட்டரின் பிசினெஸ் நடவடிக்கைகளில் லிண்டா கவனம் செலுத்துவார். நான் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவேன். இந்த பிளாட்ஃபார்மை X ஆக மாற்ற லிண்டாவுடன் இணைந்து செயல்பட எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இந்த தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் செய்தார். பயனர்களுக்கு சந்தா கட்டணம் தொடங்கி ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது என அவரது நடவடிக்கைகள் நீண்டன.

இந்நிலையில், ட்விட்டருக்கு புதிய சிஇஓ-வை அவர் நியமித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த லிண்டா யாக்கரினோதான் ட்விட்டரின் சிஇஓ – வாக நியமிக்கப்பட இருப்பதாக ஊகங்கள் எழுந்த நிலையில், தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

யார் இந்த லிண்டா யாக்கரினோ?: லிண்டா யாக்காரினோ 10 ஆண்டுகளுக்கும் மேலாக NBC Universal நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நிறுவனத்தின் விளம்பர செயல்திறனை அளவிடுவதற்கான ஒரு தொழில்துறை வக்கீலாக அவர் இருந்து வந்துள்ளார். மேலும் அந்நிறுவனத்தின் விளம்பர விற்பனையின் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும். யாக்காரினோ, டர்னர் என்டர்டெயின்மென்ட்டில் 19 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர். தாராளவாத கலைகள் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பட்டம் பெற்றுள்ளார்.

மியாமியில் கடந்த மாதம் நடந்த ஒரு விளம்பர மாநாட்டில் யாக்காரினோ எலான் மஸ்க்கை பேட்டி கண்டார். முன்னதாக, எலான் மஸ்க்கை கை தட்டல்களுடன் வரவேற்க பார்வையாளர்களை அவர் ஊக்குவித்தார். மேலும் அவரது பணி நெறிமுறைகளைப் பாராட்டினார். இந்த நிலையில் யாக்கரினோ மஸ்க்கால் ட்விட்டரின் சிஇஓ- வாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாக்காரினோ NBC Universal – லிருந்து வெளியேறினால் அது அந்நிறுவனத்திற்கு பெரும் இழப்பு என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.