அரக்கோணம்: பிளஸ் 2 தேர்வில் தமிழில் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்ற மாணவியை நேரில் சென்று வாழ்த்தி நடிகர் தாடி பாலாஜி தான் விரைவில் அரசியலுக்கு வர போவதாகவும் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியாகின. இதில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
அவரை அண்மையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் உயர்கல்வி படிப்பதற்கு தமது தலைமையிலான அரசு உதவி செய்யும் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார். அது போல் திண்டுக்கல் நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து தங்க பேனாவை பரிசாக கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி லக்ஷயா ஸ்ரீயை நடிகர் தாடி பாலாஜி நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். இதற்காக அரக்கோணத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி, லக்ஷயா ஸ்ரீயை நேரில் சந்தித்து வாழ்த்தினேன்.
அவரது கல்விக்கான சிறிய உதவிகளையும் நான் செய்கிறேன் என கூறியுள்ளேன். தமிழக அரசும் பள்ளிக் கல்வித் துறையில் மாணவ, மாணவிகளுக்காக பல நலத்திட்ட உதவிகளை கொண்டு வருகிறார்கள். இந்த வாய்ப்பை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும். விரைவில் நான் அரசியலுக்கு வருவேன், வந்தால் நல்ல விஷயங்களை செய்வேன்.
தனியாக கட்சி ஆரம்பிக்கும் ஆசை இல்லை. எனக்கான அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் நான் வேலை செய்ய தயாராகவுள்ளேன் என தாடி பாலாஜி கூறியுள்ளார். தாடி பாலாஜி அண்மையில் திருவள்ளூர் மாவட்டம் அருகே பழங்குடியினர் வசிக்கும் பகுதி அருகே பென்னாலூர்பேட்டை பயிற்சி காவல் துறை உதவி ஆய்வாளர் பரமசிவத்தை பாராட்டியிருந்தார். பரமசிவம் தான் பணியாற்றும் பகுதிக்கு அருகே உள்ள பழங்குடியினத்தவரின் பகுதிக்கு சென்று கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
யார் காலிலாவது விழுந்து நான் படிக்க வைக்கிறேன். பள்ளிக்கு அனுப்புங்கள் என கெஞ்சி கேட்டிருந்தார். இதை முதல்வர் ஸ்டாலினும் பாராட்டியிருந்தார். தாடி பாலாஜியும் வீடியோவில் ஹாய் எல்லாருக்கும் வணக்கம். நான்தான் தாடி பாலாஜி பேசுறேன். நான் ஒரு நிகழ்வு குறித்து கேள்விப்பட்டேன். பெண் குழந்தைகளை நிறைய பேர் பள்ளிக்கு அனுப்பாமல் அப்படியே வீட்டில் வைத்திருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. பெண் குழந்தைகளுக்கு கல்வி என்பது மிகவும் முக்கியம். இதை நிறைய பேர் சொல்கிறார்கள். இதற்கு ஒரு சின்ன பிள்ளையார் சுழியை போட்டுள்ளார் பென்னாலூர்பேட்டை பயிற்சி உதவி ஆய்வாளர் பரமசிவம்.
இந்த தொழிலை அவர் எந்த அளவுக்கு மதிக்கிறார் என்பது தெரிகிறது. அவர் செய்த இந்த காரியத்திற்காக அவருக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு என்னவென கேட்டீர்களேயானால், தமிழக முதல்வர் ஸ்டாலின், பரமசிவத்தை பாராட்டியுள்ளார். இதை கேள்விப்பட்டதும் எனக்கு மகிழ்ச்சியாகிவிட்டது. பரமசிவம் அண்ணே நீங்கள் இன்னும் வாழ்க்கையில் அடுத்தடுத்த இடத்திற்கு போக எனது வாழ்த்துகள். முடிந்தால் விரைவில் உங்களை நான் நேரில் சந்திக்கிறேன். வணக்கம் என தாடி பாலாஜி அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இவருடைய மனைவி நித்யா பாஜகவில் இணைந்துள்ளார். அவர் மத்தியில் ஆளும் கட்சியில் இருக்கிறார். தாடி பாலாஜி மாநிலத்தை ஆளும் திமுகவில் இணைவார் என தெரிகிறது. ஆயினும் ஏற்கெனவே திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசியுள்ளார். பல திமுக நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் விரைவில் அரசியலுக்கு வருகிறேன் என கூறுவது தாடி பாலாஜி பில்டப் கொடுப்பது போல் உள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன.