திருப்பதியில் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை சோதனை செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கடந்த ஏழாம் தேதி இரவு இலவச தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட சென்ற பக்தர் ஒருவர் செல்போனை கோவிலுக்குள் எடுத்து சென்று வீடியோ பதிவு செய்தார். அவர் பதிவு செய்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் செல்போனை கோவிலுக்குள் எடுத்து சென்று வீடியோ எடுத்த தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரை சேர்ந்த பக்தர் ராகுல் ரெட்டி என்று அடையாளம் கண்ட போலீசார் அவரை திருப்பதிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக செல்லும்போது அவர்களை சோதனை செய்யும் பாதுகாப்பு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பக்தர்களை சோதனை செய்ய பயன்படுத்தும் ஸ்கேனர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தேவஸ்தான நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அதே நேரத்தில் பாதுகாப்பு, சோதனை ஆகியவை காரணமாக கோவிலுக்குள் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை எந்த விதத்திலும் குறையக் கூடாது என்பதிலும் தேவஸ்தான நிர்வாகம் உறுதியாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
newstm.in