சென்னை: சமீபத்தில் டிடிவி தினகரனை சந்தித்த ஓ பன்னீர்செல்வம்.. சசிகலாவை சந்திக்க முடியாமல் காத்துகொண்டு இருக்கிறாராம். சசிகலாவின் சமீபத்திய நடவடிக்கைகள் காரணமாக ஓ பன்னீர்செல்வம் கொஞ்சம் பொறுமை இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் சோகம் இருக்கலாம்.. ஆனால் வாழ்க்கையே சோகமாக இருக்க கூடாது என்பார்கள். அப்படிசோகமே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம்.
பல சட்ட போராட்டங்கள்.. வழக்கு மேல் வழக்குகள்.. பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடத்தியும் கூட ஓ பன்னீர்செல்வம் அரசியல் ரீதியாக தோல்வி மேல் தோல்வியை சந்தித்து வருகிறார்.
சமீபத்தில் தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று திருச்சியில் மாநாட்டை நடத்தினார் ஓ பன்னீர்செல்வம். ஓபிஎஸ் அணி சார்பில் முப்பொரும் விழா திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நடத்தப்பட்டது. ஆனால் இந்த மாநாடு தோல்வியில் முடிந்து உள்ளது.
இந்த மாநாட்டிற்கு டிடிவி தினகரன், சசிகலா வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு பேருமே வரவில்லை. இரண்டு பேருக்குமே அழைப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கூட்டத்தை நடத்துங்கள்.. கூட்டத்திற்கு வர முடியாது.. நாம் பின்னர் சந்தித்துக்கொள்ளலாம் என்று அப்போதே சசிகலா கூறிவிட்டாராம்.
சமீபத்தில், அதிமுக பொதுக்குழு வழக்கில் தோல்வி அடைந்த நிலையில், தேர்தல் ஆணையமும் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராகவே முடிவு எடுத்து உள்ளது.
தேர்தல் ஆணையமும் கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் அதிகாரபூர்வமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
டிடிவி தினகரன் சந்திப்பு:இந்த நிலையில்தான் சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் ஆகியோர் இடையே சந்திப்பு நடந்தது. நேற்று டிடிவி தினகரன் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்களுடன் டிடிவி தினகரன் சந்திப்பு நடத்தினார்.
இதில் வீட்டு வாசலுக்கே போய் ஓபிஎஸ் ஆகியோரை டிடிவி தினகரன் வரவேற்றார். இந்த சந்திப்பில் சேர்ந்து செயல்படுவது, அதிமுகவை மீட்பது, எடப்பாடி பழனிசாமியை அதிகாரத்தில் இருந்து நீக்குவது உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன.
இந்த நிகழ்விற்கு பின் ஓபிஎஸ் அளித்த பேட்டியில், கண்டிப்பாக சசிகலாவை சந்திப்பேன். ஏன் அவசரப்படுகிறீர்கள். கண்டிப்பாக போய் பார்ப்பேன். எப்போது பார்ப்பேன் என்று சொல்லுவேன். உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் போய் பார்ப்பேன். உறுதியாக பார்ப்பேன் என்று கூறி இருந்தார்.
சந்திப்பு நடக்கவில்லை:ஆனால் டிடிவி தினகரனை சந்தித்த ஓ பன்னீர்செல்வம்.. சசிகலாவை சந்திக்க முடியாமல் காத்துகொண்டு இருக்கிறாராம். சசிகலாவின் சமீபத்திய நடவடிக்கைகள் காரணமாக ஓ பன்னீர்செல்வம் கொஞ்சம் பொறுமை இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சசிகலா சென்னையில் உள்ள தி நகர் இல்லத்தில் இல்லை. அவர் வாரம் ஒரு ஊர் என்று பல்வேறு ஊர்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் சென்று கொண்டு இருக்கிறார்.
உறவினர் வகையில் இருக்கும் மனஸ்தாபங்களை, மோதல்களை சரி செய்வதற்காக அவர் பல்வேறு ஊர்களுக்கு சென்று கொண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதனால் ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஓ பன்னீர்செல்வம் சசிகலாவை சந்திக்க முடியாமல் காத்து இருக்கிறாராம்.
சசிகலா எப்போது மீண்டும் சென்னைக்கு வந்து ஆக்டிவாக இருப்பார் என்று தெரியாமல் தி நகர் வீடு உறவினர்களும் திகிலில் இருக்கிறார்களாம்.
டிடிவி என்ன சொன்னார்?:முன்னதாக ஓபிஎஸ் உடனான சந்திப்பிற்கு பின் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில். நான் ஓ பன்னீர்செல்வத்தை நம்பி இருட்டில்கூட நான் கையைப் பிடித்துக் கொண்டு செல்வேன். அந்த அளவிற்கு எனக்கு நம்பிக்கை உள்ளது. அவருக்கும் சரி.. எனக்கும் சரி.. எந்த சுயநலமும் இல்லை.
அதிமுகவை வலிமைப்படுத்த வேண்டும். கட்சியை பல நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் அரக்கர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். திமுகவை வீழ்த்த அதிமுகவில் இருப்பவர்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
அதிமுகவை மீட்பதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது. எடப்பாடியை நம்ப முடியாது. அவர் சுயநலம் மிக்கவர் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.
சசிகலா சந்திப்பு:சமீபத்தில் சசிகலா அளித்த பேட்டியில், ஆரம்பத்தில இருந்து என்னோட உத்தியை பார்த்துட்டு இருக்கீங்க; இதுக்கு மேல நான் வெளிய சொல்ல கூடாது. என்ன நடக்கும் என்று உங்களுக்கே வரும் நாட்களில் தெரியும், என்றார்.
இதையடுத்து.. ஓபிஎஸ் – இபிஎஸ் ஆகியோரை சந்திப்பதில் உங்களுக்கு பிரச்சனை இல்லையா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு கோபமா பதில் அளித்த சசிகலா.. என்னங்க இது.. என்னுடைய கட்சிக்காரர்களை நான் சந்திப்பதில் என்னங்க இருக்கிறது. இதில் என்ன இருக்க முடியும். உங்க கிட்ட சொல்லிவிட்டு வேண்டுமானால் நான் முடிவு எடுக்கிறேன், என்று சசிகலா கூறினார்.
இப்படி கூறிய சசிகலா இப்போது வரை ஓ பன்னீர்செல்வத்தை பார்க்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.