பாவ்: மலை உச்சியில் கோவில் இருக்கு.. ஏழு மலை தாண்டி கோவில் இருக்கு.. ரோப் காரில் கூட போய் சாமி பார்க்கலாம்.. ஆனால் நடுக்கடலில் நடந்து போய் சாமி வணங்க முடியுமா? சாத்தியம்தானா? இயற்கையின் இயல்போ? இறைவனின் திருவிளையாடலோ? அப்படி ஒரு கோவில் இருக்கிறது.. அதை நம் வாழ்நாளில் தரிசப்பதும் நல்ல அனுபவமும் கூட.
குஜராத் மாநிலத்தின் பாவ்நகர். அகமதாபாத்தில் இருந்து சுமார் 4 மணிநேர பயணம் (170 கிமீ). பாவ்நகர் என்பது ஜைன மதத்தை பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு புண்ணிய ஷேத்திரம். இந்துக்கள் தங்களது வாழ்நாளில் ஒருமுறையேனும் காசி யாத்திரை செல்ல வேண்டும் என விரும்புவதைப் போல ஜைனர்கள் ஒருமுறையேனும் பாவ்நகரில் உள்ள பாலிதானாவுக்கு செல்ல வேண்டும் என்பது நியதி.
பாவ்நகரின் பாலிதானா மலைக்குன்றின் உச்சியில் 3,000க்கும் அதிகமான சலவைக்கல் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. 3,000 படிக்கட்டுகளைக் கடந்து 3,000க்கும் அதிகமான சலவைக் கல் கோவில் கட்டுமானம் எப்படி சாத்தியமானது என்பது புரியாத புதிர். அதனைக்காட்டிலும் பாலிதானா மலைகுன்றின் அடியில், கோடி கோடியாய் செல்வம் கொட்டிக் கிடக்க அப்படியே தூக்கி எறிந்துவிட்டு துறவிகளாகும் சேட்டு வீட்டு பெண்களின் துறவற வாழ்வை பார்க்க முடியும். ஆம் ஜைன துறவிகளுக்கான மடங்கள் இங்கு உண்டு. ஆண்கள், பெண்கள் இருபாலருக்குமான தனி இடங்கள். அவர்களுக்கான தனி பொது சமையல் கூடங்கள். ஆதி கால வழக்கப்படி பிச்சை பாத்திரம் ஏந்தி போய் உணவு பெறுதல், தலை முடியை தாங்களே ஒருவித இயற்கை முறையில் கைகளால் பிடுங்குதல், நாள்தோறும் 3,000 படிகளில் ஏறி இறங்கி வழிபாடு நடத்துதல் என முற்றிலுமான துறவு வாழ்க்கையை பார்க்க கிடைப்பதும் ஒருவித பேரனுபவம்.
சரிங்க.. அந்த கடல் கோவில் எங்க இருக்குன்னுதானே கேட்கிறீங்கள்? இதே பாவ் நகரில் இருந்து வெறும் 24 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கடற்பரப்பு இருக்கிறது. இந்த இடத்துக்கு பெயர் கோலியாக். சாதாரணமாக சென்று திரும்பக் கூடிய கடற்பரப்புதான். மிக சிறியதான சுற்றுலா தலமாக இருக்கும்.
நாம் போய் நிற்கும் போது பல அடி உயரமான கடல் அலைகள் எழும்பி மிரட்டிக் கொண்டிருக்கும். கடலுக்கு நடுவில் ஒரே ஒரு கம்பின் முனை மட்டும் லேசாக தெரியும். இங்கே எங்கப்பா கோவில் இருக்கு? கடலுக்கு நடுவே எப்படி போக முடியும்? அலையோ மூர்க்கமாக அடிக்குதே? என நம்மை அறியாமலேயே ஒரு தவிப்பு தாவிக் கொள்ளத்தான் செய்யும். நம்மைப் போலத்தான் அப்படியே ஜனம் வந்து வந்து குவியும்…
நேரம் போக போக.. கொஞ்சம் பொழுது சாய சாயத்தான் அந்த வேடிக்கை அரங்கேறும்.. மெல்ல மெல்ல அலைகளின் ஆக்ரோஷம், அலைகளின் உயரம் அப்படியே தணியத் தொடங்கும்… கொஞ்ச நேரத்தில் அப்போது மிரட்டிய அலைகள் அப்படியே பின்னோக்கி போகத் தொடங்கிவிடும். இப்படி அலைகள் பின்னோக்கி போக ஆரவாரமாய் பக்தர்கள் கூட்டமும் கடலுக்குள் இறங்கி பயணத்தை தொடங்கிவிடும்.
ஒரு கட்டத்தில் அலைகள் கண்ணுக்கே தெரியாமல் காணாமல் போய்விடும்.. ஆனால் நடுக்கடலில் நம் கண்முன்னே பிரம்மாண்ட கற்கோவிலின் எச்சங்கள் சிவலிங்கங்களுடன் தெரியும். முன்னர் பார்த்த கம்பு போன்ற முனை மிகப் பிரம்மாண்ட கொடிமரமாய் பிரம்மிப்பூட்டும். நடுக்கடலில் நடந்து போய், எப்போது அலை திரும்ப வருமோ? என்ன ஆகுமோ? என்ற திகிலுடன் பூஜை செய்வார்கள்.. அதிகபட்சம் ஒரு 2 மணிநேரம்தான்.. அதற்கு பின்னர் எச்சரிக்கை குரல்கள் ஒலிக்கிறதோ இல்லை.. அதுவரை காணாமல் போயிருந்த அந்த அலைகள் மீண்டும் கோவிலை நெருங்கும்.. நம்மை கடற்கரை நோக்கி ஓடவிடும்… கடற்கரையில் இருந்து திரும்பி பார்த்தால் நாம் ஏறி நின்று வழிபாடு செய்த கோவிலை காணாமல் போகச் செய்திருக்கும் பிரம்மாண்ட பேரலைகள்.. இது நித்தம் நித்தம் குஜராத்தின் பாவ்நகர் கோலியாக் கடற்பரப்பில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.. நடுக்கடல் சிவாலய வழிபாட்டு அனுபவத்தை தெய்வத்தின் பேரருளாக கொண்டாடுகின்றனர் பக்தர்கள்! அதேநேரத்தில் கடல் உள்வாங்குதல் எனும் இயற்கை நிகழ்வின் அடிப்படையில்தான் இது சாத்தியம் என்கிறது அறிவியல்!