அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே ஹெரிடேஜ் தெரு உள்ளது. இங்குள்ள பார்க்கிங் கட்டிடத்தில் கடந்த 6-ம் தேதி காலை குண்டு வெடித்தது. இது 200 கிராம் பட்டாசு ரசாயணத்தில் குளிர்பான கேனில் தயாரிக்கப்பட்ட குண்டு என விசாரணையில் தெரியவந்தது.
அடுத்த 30 மணி நேரத்துக்குள், அதே பகுதியில் மீண்டும் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது. இது பார்க்கிங் கட்டிடத்தின் மேற்கூரையில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய போலீஸார் 1.10 கிலோ பட்டாசு மருந்தில் தயாரிக்கப்பட்ட டிபன் பாக்ஸ் குண்டை மீட்டனர்.
இந்நிலையில் பொற்கோயிலை சுற்றியுள்ள நடைபாதை மற்றும் பூங்கா பகுதியில் குரு ராம்தாஸ் ஜி நிவாஸ் விடுதிக்கு பின்புறம் நேற்று அதிகாலை மீண்டும் பயங்கர குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று புலன் விசாரணை மேற்கொண்டனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய ஆசாத்வீர் சிங், அம்ரிக் சிங், சாஹிப் சிங், ஹர்ஜித் சிங் மற்றும் தர்மிந்தர் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் கூறியதாவது:
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னால் உள்ள சதி குறித்து நாங்கள் புலன் விசாரணை நடத்துவோம். இந்த குண்டு வெடிப்பு சம்பவம், தீவிரவாத குழுக்களின் சதி திட்டமா அல்லது வேறு சிலரின் உத்தரவின் பேரில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.