சென்னை:
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதுமே பம்பரமாக சுழல ஆரம்பித்து விட்டார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். ஐடி துறையைச் சேர்ந்த பெரும் தலைகளை சந்தித்து இன்று அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது ஐடி துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும், புதிய விஷயங்களை புகுத்துவது குறித்தும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு நிதித்துறை அமைச்சராக இரண்டு ஆண்டுகள் பொறுப்பு வகித்த பிடிஆர், மாநிலத்தின் நிதிநிலையை சிறப்பாக கையாண்டார். கொரோனா ஊரடங்குக்கு பிறகு கிட்டத்தட்ட ஐசியு வார்டில் இருந்த தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுத்தவர் பிடிஆர் தான்.
இந்நிலையில், நேற்று நடந்த அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆர் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டார். நிதித்துறை தங்கம் தென்னசு வசம் ஒப்படைக்கப்பட்டது.
பாஜக தலைவர் வெளியிட்ட ஆடியோ விவகாரம் தான், பிடிஆரின் துறை மாற்றத்துக்கு காரணம் எனப் பேசப்பட்டாலும், உண்மை அது கிடையாது என்கின்றனர் முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்கள். பிடிஆரிடம் ஐடி துறையை ஒப்படைக்கும் முடிவை பல மாதங்களுக்கு முன்பே ஸ்டாலின் எடுத்துவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவிலேயே தமிழகம்தான் ஐடி துறையில் முதன்மையாக விளங்க வேண்டும் என்ற டாஸ்க்குடன் தான், தங்கம் தென்னரசிடம் அந்த துறை ஒப்படைக்கப்பட்டதாகவும், ஆனால் அவரது செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதததே பிடிஆரிடம் அந்த துறை சென்றதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
இதனிடையே, பிடிஆர் வசம் ஐடி துறை சென்றதால் இனி அந்த துறையில் பெரிய அளவிலான மாற்றங்களும், புதுமைகளும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக சென்னை, கோவையில் இருப்பது போல தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஐடி நிறுவனங்களை அதிக அளவில் கொண்டு வருவது தான் பிடிஆரின் முதல் ப்ளான் எனக் கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, மதுரையில் டைடல் பூங்காக்களை விரைவில் அமைக்கும் நடவடிக்கையில் அவர் இறங்கியுள்ளதாக ஐடி அமைச்சக உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஐடி துறை அமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே, அந்த துறையைச் சேர்ந்த பெரும் தலைகளையும், அதிகாரிகளையும் பிடிஆர் சந்தித்து வருகிறார். ஐடி துறை செயலாளர் குமரகுருபரன், டாக் டிவி ஜான் லூயிஸ், பாரத் நெட் கமல் கிஷோர், TNeGA பிரவீன் நாயர் ஆகியோரை பிடிஆர் சந்தித்து பேசினார். மேலும், இதுதொடர்பான புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிடிஆர், “புரட்சிகரமான ஐடி துறையில் வரப்போகும் மகத்தான விஷயங்களை ஆலுடன் எதிர்பார்த்துள்ளோம். “எப்போதும் போல மாற்றத்தின் பிரதிநிதியாக இருப்பதை விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.