பர்ஹானா பற்றி தவறான தகவல்களை பரப்பாதீர்கள் : தயாரிப்பு நிறுவனம் வேண்டுகோள்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'பர்ஹானா' படம் இன்று வெளியாகி உள்ளது. இதை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். இந்த படத்தின் கதை ஒரு முஸ்லிம் பெண் குடும்பத்தின் வறுமையை போக்க கால் செண்டருக்கு வேலைக்கு செல்வதாகும். இதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: எங்கள் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், கைதி, அருவி, தீரன் அதிகாரம் ஒன்று,ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது பர்ஹானா திரைப்படத்தை, ரசிகர்கள் பார்வைக்கு திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது.

மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை, அன்பு ஆகிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் எங்களுக்கு, அரசால் முறையாக தணிக்கைச் செய்யப்பட்டு வெளியாக உள்ள பர்ஹானா திரைப்படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருகிறது.

பர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும் , உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல. நல்ல திரைப்படங்களை வழங்கவேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கமே தவிர, ஒருநாளும் எந்த மத உணர்வுகளுக்கும் , நம்பிக்கைகளுக்கும் எதிராகவோ, புண்படுத்தும் விதமாகவோ செயல்படுவது அல்ல. மேலும் மனித குலத்திற்கு எதிரான ஒரு செயலை என்றும் எங்கள் கதைகளில் நாங்கள் அனுமதிப்பதில்லை, விரும்புவதுமில்லை. இதை எங்களின் பர்ஹானா திரைப்படம் குறித்து அறியாமல் சர்ச்சைகளை உருவாக்கி வரும் சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம்.

தணிக்கை செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தை புரிதல் குழப்பத்தினால் அதன் வெளியீட்டுக்கு முன்பே எதிர்ப்பதும், சர்ச்சைகளுக்கு ஆளாக்குவதும் முறையானதல்ல. அது அவ்வாறு எதிர்பவர்களையே சரியான புரிதலற்றவர்களாகவே காட்டும். பல நூறு பேரின் கடுமையான உழைப்பில் தான் ஒரு திரைப்படம் வெளியாகிறது. நோக்கத்தில் பழுதில்லா ஒரு திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்.

இந்தியா போலவே, குறிப்பிட்ட சில வெளிநாடுகளிலும், மத உணர்வுகள் புண்படுவது போன்ற காட்சிகள் ஒரு திரைப்படத்தில் இருந்தால், அந்தப் படம் தணிக்கையைத் தாண்டுவது மிகக் கடினம். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், ஓமன், பக்ரைன், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளின் தணிக்கை விதிகள் கடுமையானதாக இருக்கும். ஆனால் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அந்த நாடுகளிலேயே பர்ஹானா திரைப்படம், எந்தவித சிக்கலும் இன்றி தணிக்கை செய்யப்பட்டு வெளியீடுக்குத் தயாராகிவிட்டது. இதுவே பர்ஹானா எந்த விதமான சர்ச்சையையும் உள்ளடக்காத படம் என்பதை தெளிவுபடுத்துகிறது. எனவே பர்ஹானா திரைப்படம் குறித்து புரிந்து கொள்ளாத நண்பர்கள் இந்த விளக்கத்தை நல்லமுறையில் ஏற்று, தோழமையுடன் ஒத்துழைப்பை வழங்கிடப் பணிவன்புடன் கோருகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.