பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதால் பாஜகவும் காங்கிரசும் தங்களை அணுகி உள்ளதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.22 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அங்கு தொடர் போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தலில் வாக்களித்தவர்களிடம், அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என கேட்டு எடுக்கப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிகளில் பாஜக, காங்கிரஸ் இரண்டுக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சில கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும், சில கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என தெரிவித்துள்ளன. எனினும், அந்த எண்ணிக்கையும் அக்கட்சிகளுக்கு நம்பிக்கைக் கொடுப்பதாக இருக்கவில்லை. 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் குறைந்தபட்சம் 113 தொகுதிகளில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே ஆட்சி அமைக்க முடியும். எனினும், காங்கிரஸ், பாஜக இரண்டும் ஏறக்குறைய 100 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் தங்களை அணுகி உள்ளதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் தன்வீர் அகமது, “இரு கட்சிகளும் எங்களை அணுகி உள்ளன. இரு கட்சிகளும் எங்களை தொடர்பு கொள்ளும் நிலையில் எங்கள் கட்சி உள்ளது. கர்நாடக மக்களுக்கு யார் நல்லது செய்வார்களோ அவர்களை எங்கள் கட்சி ஆதரிக்கும்” என தெரிவித்துள்ளார்.
எனினும், பாஜக இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ஷோபா கரந்த்லாஜே, “கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளத்தை தொடர்பு கொள்ளவில்லை. எங்கள் நிர்வாகிகளோடு நாங்கள் மேற்கொண்ட ஆலோசனையில் ஒரு விஷயம் எங்களுக்கு உறுதியானது. இந்த தேர்தலில் நாங்கள் 120 இடங்களில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பதுதான் அது” என தெரிவித்துள்ளார்.