ஆண் வேடம் போட்டுச்சென்று மாமியாரின் காலை கம்பியால் அடித்து உடைத்ததாக மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர்..
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரத்தை சேர்ந்தவர் வாசந்தி. கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6 மணி அளவில் வாசந்தி அருகில் உள்ள பால் நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது ஆண் ஒருவர் வழிமறித்து இரும்பு கம்பியால் காலிலும், தலையிலும் தாறுமாறாக தாக்கியதில் வாசந்தியின் காலில் எலும்பு முறிவு ஏற்ப்பட்டுள்ளது.
இவரது அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அங்கிருந்து தாக்கியவர் தப்பி ஓடி உள்ளார். காயம்பட்டு கிடந்த வாசந்தியை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரம் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதிகளில் உள்ள 40க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் பெண் ஒருவர் ஆண் போல் வேடம் அணிந்து வந்து தாக்குதல் நடத்திச்சென்றிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்
வீட்டில் உள்ளவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில் கணவனின் சட்டை மற்றும் பேண்டை போட்டு முகமூடி அணிந்து சென்று வாசந்தியை தாக்கியது அவரது மருமகளான சுகன்யா என்பது தெரியவந்தது
சுகன்யாவின் கணவர் ரெதீஷ்குமார் போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகின்றது. போதையில் வீட்டிற்கு வரும் கணவர் தினசரி தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அதற்கு முக்கிய காரணம் தனது மாமியார் அவருக்கு ஆதரவு தெரிவிப்பது தான் எனக் கூறிய சுகன்யா இதனால் திட்டமிட்டு மாமியாரை கம்பியால் தாக்கியதாக வாக்குமூலம் அளித்தார்.
இதை அடுத்து சுகன்யாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மாமியார் மருமகள் சண்டை என்பது ஆதிகால சங்கதி என்றாலும் காலமாற்றத்துக்கு ஏற்ப சண்டையில் புது புது உத்திகளை பின் பற்றி தாக்கி சிக்கிக் கொள்வது குறிப்பிடதக்கது.