மதுரை: மதுரை கோட்டத்தில் 4 ரயில் நிலையங்களில் பார்சல் மேலாண்மை அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”விவசாயிகள், தொழிலதிபர்கள் , வர்த்தகர்கள், பண்ணை விளைபொருட்கள் ,வணிகப்பொருட்களை பெரிய நகரங்கள் மற்றும் பிற விரும்பிய இடங்களுக்கு கொண்டு செல்ல ரயில்வே பார்சல் சேவைகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பிற போக்குவரத்து முறைகளுடன் ஒப்பிடும்போது, ரயில்வே பார்சல் சேவை வேகம், நம்பகம், சிக்கனமாக கருதப்படுகிறது.
பரந்த ரயில்வே நெட்வொர்க்கில் பார்சல் சரக்குகளின் இயக்கத்தை எளிமையாக்க, பார்சல் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (PMS) இந்திய ரயில்வேயில் செயல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, மதுரை கோட்டத்திலுள்ள மதுரை, திண்டுக்கல், நெல்லை, ராஜபாளையம் ஆகிய 4 முக்கிய ரயில் நிலையங்களில் இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி, விருதுநகர், ராமேஸ்வரம், பாம்பன், செங்கோட்டை, திருச்செந்தூர் ஆகிய 6 ரயில் நிலையங்களுக்கு விரிவுப்படுத்தும் இறுதிகட்ட பணி நடக்கிறது.
நன்மைகள்: மின்னணு எடை, கண்காணிப்பு வசதி மற்றும் SMS அறிவுறுத்தல்கள். கணினி மயமாக்கப்பட்ட கவுண்டர்கள் மூலம் பார்சல், சாமான்களை முன்பதிவு செய்யவும், சரக்குகளை மின்னணு எடை மூலம் எடையை தானாக அளவிடவும் உதவுகிறது. இதன்மூலம் ஒவ்வொரு சரக்குக்கும், பத்து இலக்க பதிவு எண் உருவாக்கப்பட்டு, பார்க்கோடு குறியீட்டின்படி சரக்கின் இருப்பிடம் குறித்த கண்காணிப்பை வழங்குகிறது.
பார்சல் கையாளுதல் ரயில்வேக்கு வருவாய் ஆதாரங்களில் முக்கியமான ஒன்று. 2022-23 ஆம் ஆண்டில் பார்சல் கையாளுதலின் மூலாக ரூ 10.97 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மதுரை கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களில் 24 மணி நேர பார்சல் கையாளும் வசதி உள்ளது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.