புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே கருக்காகுறிச்சி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கவிதா (40). இவருடைய சகோதரியின் கணவர் பாலசேகர். இவர் திருச்சியில் வசித்து வருகிறார். கவிதா, புதுக்கோட்டையில் துணிக்கடை ஒன்றை ஆரம்பிக்கப் போவதாகக் கூறி பாலசேகரிடம் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தான் கொடுத்தப் பணத்தை கவிதா, பாலசேகருக்கு திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால், கடந்த சில மாதங்களாகவே பாலசேகர் கொடுத்தப் பணத்தை வட்டியுடன் திருப்பி தரக்கோரி, தொடர்ந்து கவிதாவிடம் கேட்டு வந்திருக்கிறார்.
இதில், இருவருக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் தகராறு நீண்ட நாள்களாக இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில், திருச்சியிலிருந்து, கருக்காகுறிச்சிக்கு வந்த பாலசேகர், கவிதாவின் வீட்டிற்குச் சென்று பணத்தைக் கேட்டிருக்கிறார். இதில், கவிதா பணத்தை இப்போது திருப்பித் தர முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை கவிதாவின் வீட்டில் வீசினார்.
இதில், கவிதாவின் வீடு தீப்பிடித்து எரிந்தது. உடனே, அக்கம்பக்கத்தினர் உதவியோடு, தீ அணைக்கப்பட்டது. அப்போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் கடுமையாக முற்றியிருக்கிறது. இதில், ஆத்திரமடைந்த பாலசேகர், மேலும் மறைத்து வைத்திருந்த கைதுப்பாக்கியை எடுத்து கவிதாவை நோக்கிச் சுட்டார். அப்போது, கவிதாவின் உறவினர் ஒருவர் பாலசேகரைத் தடுத்து, திசையைத் திருப்பியிருக்கிறார். இதனால், துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு அருகே இருந்த வாகனத்தின் மீது பட்டதால், கவிதா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து, உடனே பாலசேகர் அங்கிருந்து தப்பித்து ஓடினர். இதையடுத்து, கவிதா வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், பாலசேகரை கைதுசெய்து, அவரிடமிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள், அவரின் காரையும் பறிமுதல் செய்தனர். ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். போலீஸார் விசாரணையில், கவிதா பணத்தை திருப்பி தருவதாகக் கூறி கொடுக்காமல் இருந்ததாகவும், அதே நேரத்தில் தகாத வார்த்தைகளால் பேசியதால் ஆத்திரமடைந்து கவிதாவை கொல்ல முயன்றதாகதாகவும், தன்னிடம் வேலை செய்யும் வட மாநிலத்து இளைஞர்கள் மூலம் லைசன்ஸ் இல்லாத துப்பாக்கியை வாங்கியிதாக, வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்தச் சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.