மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் (ILO) பங்களிப்பும் அவசியம் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸினருக்கும் இடையிலான சந்திப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவனில் (10) நடைபெற்றது.
இதன்போது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கான பாதுகாப்பு பொறிமுறை, சர்வதேச தொழில் சம்மேளனத்தின் வகிபாகம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் விவகாரத்தில் ILO வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்திலும் இதேபோன்று ஒத்துழைப்புகள் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.