மேற்கு வங்காளத்தில் சரக்கு ரெயில் மோதி மின்சார ரெயில் தடம் புரண்டது

பர்டாவன்,

மேற்கு வங்காளத்தின் புர்பா பர்டாமன் மாவட்டத்தில் உள்ளது சக்திகார் ரெயில் நிலையம். இந்த ரெயில் நிலையம் வழியாக ஹவுரா-பர்டாமன் தடத்தில் நேற்று முன்தினம் இரவில் மின்சார ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இரவு 9.16 மணி அளவில் சக்திகார் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, அதே தடத்தில் எதிர்பாராதவிதமாக சரக்கு ரெயில் ஒன்றும் எதிரே வந்தது. இதனால் சரக்கு ரெயில், மின்சார ரெயிலை இடித்து தள்ளியது. இதில் மின்சார ரெயில் தடம் புரண்டது. பலத்த சத்தத்துடன், ரெயில் பயணிகள் ‘திடுக்’கென அதிர்வை எதிர்கொண்டனர். முதல் பெட்டியில் இருந்த ரெயில் பயணிகள் லேசான காயம் அடைந்தனர். உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ரெயில் நிலையம் அருகே இரு ரெயில்களும் மெதுவாக வந்ததால் பெரிய சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தடம் மாறும்போது ஏற்பட்ட தவறால் இரு ரெயில்களும் ஒரே தடத்தில் வந்தது விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. இந்த விபத்தால் அந்த தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. தடம்புரண்ட ரெயிலை தூக்கி நிறுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.