'ருத்ரன்' நடன கலைஞர்களுக்கு சம்பளம் தராமல் மோசடி: போலீசில் புகார்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ருத்ரன்'. இதனை தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தையும் சுமாரன வரவேற்பையும் பெற்றாலும் தொடர்ந்து வெற்றி விழா கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் படத்தில் ஆடிய நடன கலைஞர்களுக்கு சம்பளம் தராமல் ஏமாற்றி வருவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடன ஏற்பாட்டாளர் ராஜ் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி 26ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை 10 நாட்கள் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த 'ருத்ரன்' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பாடலுக்காக துணை நடிகர்கள் மற்றும் ஆடல் கலைஞர்களை ஏற்பாடு செய்து கொடுத்தேன். அதன் பின்பு அந்த காட்சியில் பணியாற்றிய அனைவருக்கும் பல நாட்களாகியும் சம்பளம் தரவில்லை.

சம்பளப் பாக்கி தொடர்பாக பெப்சி உறுப்பினர் ஸ்ரீதர் என்பவரிடம் கேட்டபோது, இரண்டு நாட்களில் சம்பளம் வந்து சேரும் என்றார். ஆனால், அதன் பிறகும் சம்பளம் வராததால் திரைப்படத்தின் மேனேஜரைத் தொடர்பு கொண்டு பேசியபோது என்னிடம் பேசினால் 10 பைசா உங்களுக்கு தர முடியாது என அவதூறாக பேசுகிறார்.

இதுகுறித்து பலமுறை பெப்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 'ருத்ரன்' திரைப்படத்தின் மேனேஜரிடம் கேட்டபோது முறையாக பதிலளிக்காமல், ராகவா லாரன்ஸ் அலுவலகத்திற்கு சென்று உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

இதனால் 10 நாட்கள் கடுமையாக உழைத்த நடன மற்றும் பின்னணி நடிகர்களுக்கு சம்பளம் பாக்கி தராமல் ஏமாற்றி வரும் மெயின் ஏஜென்ட் ஸ்ரீதர் மற்றும் அந்த திரைப்படத்தின் மேனேஜர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சம்பள பாக்கியை பெற்றுத் தர வேண்டும். என்று கூறியுள்ளார். இப்புகாரின் பேரில் வடபழனி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.