சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்ட ‘மொக்கா’ புயல் தற்போது வங்கதேசம் நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக மத்திய வங்கக் கடல் பகுதியில் இன்று மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கக் கடலில் நிலவும் ‘மொக்கா’ புயல், அந்தமான் போர்ட்பிளேயரில் இருந்து, மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 510கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தீவிரப் புயலாக வலுப்பெற்று இன்று (மே 12) காலை வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் திரும்பி, அதிதீவிரப் புயலாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொள்ளும்.
நாளை காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, மணிக்கு 140 முதல் 150 கி.மீ. வரைபலத்த காற்று வீசும். இடையிடையே 165 கி.மீ. வேகம் வரையிலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். வரும் 14-ம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை புயல் கடக்கக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் வரும் 15-ம் தேதிவரை ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வரும் 15-ம் தேதி வரை உயரக்கூடும். குறிப்பாக, 14, 15-ம் தேதிகளில் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (மே 12) 120 கி.மீ. , நாளை 75 .கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை 135 கி.மீ. வேகத்திலும், 13-ம் தேதி 165 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: அமைச்சர் தகவல்: சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மொக்கா’ புயல் தொடர்பாக, மீனவர்களுக்கு தேவையான சிறப்பு எச்சரிக்கை தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிர புயலாக மாறி வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் இதற்கு ‘மொக்கா’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் அறிவுரையின்பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு எச்சரிக்கையின்படி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மீன்வளத் துறை ஆணையர், கடலோர மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மீனவர்கள், வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் வரும் 14-ம் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடலுக்கு சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்புமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.