மும்பை: ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடே மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 2021ல், சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் சிலரும் கைதாயினர்.
மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டார். தொடர்ந்து, ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஆதாரம் இல்லை என்று விசாரணைக் குழு அறிக்கை அளித்ததையடுத்து வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். முன்னதாக, வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க அவர் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்ததையடுத்து, மும்பையில் உள்ள பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநரகத்துக்கு அவர் மாற்றப்பட்டார்.
தற்போது சமீர் வான்கடே மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆர்யன் கானை விடுவிக்க லஞ்சம் கேட்ட விவகாரத்தில், சமீர் வான்கடே மற்றும் நான்கு பேர் தொடர்புடைய 29 இடங்களில் சிபிஐ இன்று சோதனை நடத்தியது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மிரட்டி சுமார் ரூ.25 கோடி பறிக்க அதிகாரிகள் திட்டமிட்ட இவர்கள், லஞ்சமாக ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) கொடுத்த தகவலின் அடிப்படையில் மும்பை, டெல்லி, ராஞ்சி, லக்னோ, சென்னை மற்றும் கவுகாத்தி ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு என்சிபி அதிகாரிகளான சமீர் வான்கடே, விஷ்வ விஜய் சிங் மற்றும் உளவுத்துறை அதிகாரி ஆஷிஷ் ரஞ்சன் கே.பி. கோசாவி மற்றும் சான்வில் டிசோசா ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்று சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.