இஸ்லாமாபாத்: இம்ரான் கானுக்கு எதிரான அனைத்து வழக்குகளில் இஸ்லமாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 11 மணி நேரம் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த இம்ரான் கான் லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலிலும் கால் பதித்தவர் இம்ரான் கான். , ‘பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய இம்ரான் கான் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்தார்.
4 ஆண்டுகள் இம்ரான் கான் ஆட்சி செய்த நிலையில், அவரது ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு ஆட்சியை கவிழ்த்தன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இம்ரான் கான் பதவி பறிபோன நிலையில், தற்போது ஷெபாஸ் ஷெரிப் அங்கு பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
இம்ரான் கான் ஊழல் புகார்கள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், நேற்று முன் தினம் இஸ்லமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றிற்கு ஆஜராக சென்றர். அப்போது திடீரென இம்ரான் கானை பாகிஸ்தான் ரேஞ்சர் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இம்ரான் கான் கைதுக்கு எதிராக நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தானில் பெரும் பதற்ற நிலவியது. இணைய தளம் முடக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டது.
பாகிஸ்தான் முழுவதும் பதற்றம் நீடித்த, இஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் கட்சியினர் போலீஸ் அதிகாரிகள் மீது பெட்ரோல் குண்டுகளையும், கற்களைவும் வீசி , மரங்களையும், அரசு சொத்துகளையும் தீ வைத்து கொளுத்தியும் கடும் வன்முறையில் ஈடுபட்டனர். குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் கடும் வன்முறை நடைபெற்றது.
இதற்கிடையே இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதற்கு எதிராக இம்ரான்கான் சார்பில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இம்ரான்கான் கைது சட்டவிரோதம்” என கூறியதோடு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி நேற்று இஸ்லமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆன இம்ரான்கானுக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனாலும், ஜாமினின் எழுத்து பூர்வ உத்தரவுக்கு முன்பாக அவர் மீண்டும் கைது செய்யப்படலாம் என்று பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ஜாமினின் எழுத்து பூர்வ உத்தரவு கிடைக்கும் வரை இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்திலேயே காத்திருந்தார்.
சுமார் 11 மணி நேரம் நீதிமன்றத்தில் காத்திருந்த இம்ரான் கான் அதன்பிறகு லாகூர் புறப்பட்டு சென்றார். பின்னர் தனது ட்விட்டரில் வீடியோ பதிவிட்ட இம்ரான் கான், அமைதியான போராட்டத்திற்கு தயராக வேண்டும் என்றும் ஜாமின் கிடைத்த பிறகும் 3 மணி நேரம் தடுப்புக்காவலில் வைத்து இருந்தார்கள் எனவும் கூறினார்.