புதுடில்லி:பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்த அதிகாரி சமீர் வான்கடே மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் லஞ்ச வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், 2021ல், மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் பயணித்தார்.
அப்போது அவரும், அவரது நண்பர்களும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறி, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல அதிகாரி சமீர் வான்கடே, ஆர்யன் கானை கைது செய்தார். இதையடுத்து ஆர்யன் கான் நான்கு வாரம் சிறையில் இருந்தார்.
ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கு போதிய ஆதாரம் இல்லை என கூறி, வழக்கிலிருந்து அவரை நீதிமன்றம் விடுவித்தது.
இதையடுத்து சமீர் வான்கடே, சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.
ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதில் விதிமீறல்கள் நடந்தனவா என்பது குறித்து சிறப்பு குழு விசாரணை நடத்தி வந்தது. இதில், சமீர் வான்கடேயின் விசாரணையில் குறைகள் இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், ஆர்யன் கான் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காக, அவரிடம், 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக, சமீர் வான்கடே மீது சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement