நடிகர்கள்: நாக சைதன்யா, க்ரித்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த்சாமி
இசை: இளையராஜா, யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: வெங்கட் பிரபு
ரன் டைம்: 147 நிமிடங்கள்
ரேட்டிங்:
சென்னை: தமிழ் சினிமா நடிகர்கள் தெலுங்கு திரையுலகில் அறிமுகம் ஆவதும், தெலுங்கு நடிகர்கள் தமிழில் அறிமுகமாவதும் சமீப காலமாக அரங்கேறி வருகிறது.
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு வெர்ஷனில் ஹீரோவாக அறிமுகமான நாக சைதன்யா தமிழில் சிம்பு நடித்த அதே படத்திலும் சில காட்சிகள் நடித்திருப்பார்.
ஆனால், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பைலிங்குவலாக உருவாகி உள்ள கஸ்டடி படத்தின் மூலமாகத்தான் ஹீரோவாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் நாக சைதன்யா. இந்நிலையில், கஸ்டடி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? காக்கிச் சட்டை நாக சைதன்யாவுக்கு கை கொடுத்ததா என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க!
கஸ்டடி கதை: மாநாடு படத்தை இயக்கி மாஸ் காட்டிய வெங்கட் பிரபு நாக சைதன்யாவுக்காக 90களில் நடக்கும் ஒரு பக்கவான சேஸிங் கதையை படமாக எடுத்துள்ளார். ஆந்திராவின் ராஜமுந்திரியில் உள்ள ஒரு பள்ளியில் குண்டு வெடிப்பு நடக்கிறது.
அந்த வெடிவிபத்துக்கு அரவிந்த் சாமி தான் காரணம் என சிபிஐ அதிகாரியான சம்பத் அவரை கைது செய்கிறார். சிறையில் இருந்து அரவிந்த் சாமியை கொலை செய்ய முதலமைச்சர் பிரியாமணி போலீஸ் அதிகாரியான சரத்குமாரை வைத்து முயற்சி செய்ய சம்பத் குமாரும் கான்ஸ்டபிளான நாக சைதன்யாவும் பெங்களூரு நீதிமன்றத்திற்கு அரவிந்த் சாமியை உயிருடன் அழைத்துச் சென்றார்களா இல்லையா என்பது தான் இந்த கஸ்டடி படத்தின் கதை.
கஸ்டடி விமர்சனம்: தமிழ், தெலுங்கு பைலிங்குவல் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து வருகின்றன. தமிழ் ரசிகர்களையும் தெலுங்கு ரசிகர்களையும் தியேட்டருக்கு அழைத்து வர வேண்டும் என்கிற முயற்சியில் நடிகர்களின் தேர்வு மற்றும் லொகேஷன்கள் என ஏகப்பட்ட மெனக்கெடல்களை இயக்குநர்கள் எடுத்தாலும், தெலுங்கு நடிகர் நடிக்கும் படங்கள் தெலுங்கு படமாகவும் தெலுங்கு இயக்குநர்கள் எடுக்கும் படங்களும் தெலுங்கு படமாகவும் தான் தெரிகிறது.
கஸ்டடி படத்தின் கதை வித்தியாசமாக இருந்தாலும், திரைக்கதையில் முதல் அரை மணி நேரத்திலேயே இயக்குநர் வெங்கட் பிரபு கோட்டை விட்டு குறட்டை விட்டு தூங்கிவிட்டார் போலத்தான் தெரிகிறது.
மாநாடு படத்தை போல ஸ்லோவாக ஆரம்பித்து சரியான இடத்தில் ட்விஸ்ட் வைத்து திருப்பி படத்தை மின்னல் வேகத்தில் கொண்டு செல்லலாம் என்கிற அதே ஃபார்முலா நாக சைதன்யாவின் விஷயத்தில் பெரிதாக செட் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நாக சைதன்யாவை தமிழ் ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தெலுங்கில் அவரது ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். நடிகை கிருத்தி ஷெட்டி ஹீரோயினாக உள்ளதால் சேஸிங் சீனில் அவரும் சேர்ந்து பயணிப்பது போன்ற விஷயங்கள் சரியாக வொர்க்கவுட் ஆகவில்லை.
சரத்குமார், அரவிந்த் சாமியின் மிரட்டலான தேர்ந்த நடிப்பு படத்தை பார்க்க சென்ற கோலிவுட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் கூட சைலன்ட்டாக இருந்த சரத்குமார் இந்த படத்தில் நடிப்பில் மிரட்டி உள்ளார்.
பிளஸ்: இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா என அப்பாவும் மகனும் சேர்ந்து இந்த படத்திற்கு பின்னணி இசை மற்றும் பாடல்களை கொடுத்துள்ளனர். 90களில் கதை நடக்கிறது என்றவுடன் விடுதலை படத்தை போல இந்த படத்திற்கும் இளையராஜாவை அணுகியுள்ளனர்.
பின்னணி இசையில் இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இசையால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். பிளாஷ்பேக் காட்சியில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் ஜீவா மற்றும் கயல் ஆனந்தியின் போர்ஷன் பெரிய பிளஸ் என்றே சொல்லலாம். கத்தி படத்தில் தண்ணீர் செல்லும் பைப்புக்குள் விஜய் உட்கார்ந்து இருப்பது போல அதே போன்ற ஒரு ஸ்பாட்டில் நடக்கும் அந்த சண்டைக் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்கிறது.
மைனஸ்: படத்தின் முதல் பாதி டெத் ஸ்லோவாக ஆரம்பிப்பது, காதல் காட்சிகள் பெரிதாக செட்டாகவில்லை. இரண்டாம் பாதியில் சேஸிங் சீன்கள் ஆரம்பித்தாலும், அரவிந்த் சாமியை ஏன் கொல்லத் துடிக்கின்றனர் என்பதற்கு ஒரு ஸ்ட்ராங்கான காரணமே இல்லாத நிலையில், அவரை காப்பாற்ற போராடும் ஹீரோவின் நிலைமையும் தர்ம சங்கடமாகி விடுகிறது.
பார்க்கலாமா? வேண்டாமா?: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வித்தியாசமான ஆக்ஷன் முயற்சி படமாகவே இந்த கஸ்டடி உருவாகி உள்ளது. மாநாடு அளவுக்கு படம் இருக்கும் என நினைத்து சென்றால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். ஆரம்ப காட்சிகளையும் சில ரிப்பீட் ஆகும் சேஸிங் காட்சிகளையும் பொறுத்துக் கொண்டால் இந்த கஸ்டடியை ஒரு முறை கஷ்டப்படாமல் தியேட்டரில் இந்த வாரம் பார்த்து ரசிக்கலாம்!