புதுடில்லி : அதானி குழுமம் மீதான பங்கு மோசடி புகார் குறித்த விசாரணையை முடிக்க, ‘செபி’ அமைப்புக்கு மூன்று மாதம் அவகாசம் அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
அமெரிக்காவை சேர்ந்த, ‘ஹிண்டன்பர்க்’ நிறுவனம், அதானி குழுமம் குறித்து கடந்த ஜன., மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.இதில், அதானி குழுமம், பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டியது.
இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்தது. அக்குழுமத்துக்கு 11 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும், பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு பாதுகாப்பான கட்டமைப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘செபி’ எனப்படும், பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகள் குறித்தும், பங்கு சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் ஆறு பேர் அடங்கிய குழுவை அமைத்தது.
அந்தக்குழு தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதே சமயம், அதானி குழும பங்கு முறைகேடு புகார் குறித்து விசாரிக்க, ஆறு மாதம் அவகாசம் தரக்கோரி, ‘செபி’ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘பொதுநல மனுக்கள் மற்றும் அவகாசம் கோரி, ‘செபி’ தாக்கல் செய்த மனுக்கள் வரும் 15ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
‘செபி’ விசாரணைக்கு ஆறு மாதங்கள் அவகாசம் கோரியுள்ள நிலையில், மூன்று மாதங்கள் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்