வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: டுவிட்டர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுக்கு புதிதாக பெண் சி.இ.ஓ., நியமிக்கப்பட்டுள்ளதாக, எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஆனால், அந்த பெண் அதிகாரியின் பெயரை அறிவிக்கவில்லை. அதேநேரத்தில், ‘என்பிசி யுனிவர்சல் ஸ்டூடியோ’ நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி லிண்டா யக்கரினோ புதிய சி.இ.ஓ., ஆக பதவியேற்கலாம் எனக்கூறப்படுகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் டாலர் கொடுத்து விலைக்கு வாங்கினார். அதில் இருந்து பல மாற்றங்களை செய்து வந்த அவர், அதன் தலைவராகவும் (சி.இ.ஓ.,) நீடித்து வந்தார். பிறகு, டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பதவியில் நீடிக்கலாமா என்பது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தினார். அதில் கிடைத்த முடிவை தொடர்ந்து, பதவியில் இருந்து விலகினார். ஆனால், புதிய தலைவரை நியமிக்கவில்லை.
இந்நிலையில், இன்று டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியதாவது: ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டர் நிறுவனத்திற்கு புதிய சி.இ.ஓ.,வை தேர்வு செய்துள்ளேன். அவர் அடுத்த 6 வாரத்தில் பணியை துவங்குவார். நான், தலைமை நிர்வாக அதிகாரி பதவியை கவனிக்க உள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
புதிய சிஇஓ யார்
புதிய சி.இ.ஓ.,வின் பெயரை எலான் மஸ்க் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், லிண்டா யக்கரினோ புதிய சி.இ.ஓ., ஆக பதவி ஏற்கலாம் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இவர் என்பிசி மீடியாவின் சர்வதேச விளம்பர பிரிவு தலைவராக உள்ளார். இது தொடர்பாக இமெயில் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கும் லிண்டா பதில் அளிக்கவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement