சென்னை: Manobala (மனோபாலா) இயக்குநரும், நடிகருமான மனோபாலாவுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
பிலிமாலயா என்ற பத்திரிகையில் பணியாற்றியவர் பாலசந்தர். அதன் பிறகு சினிமாவுக்குள் நுழைய முடிவெடுத்த பிறகு ஏற்கனவே ஒரு பாலசந்தர் இருந்ததால் தனது பெயரை மனோபாலா என மாற்றிக்கொண்டார். கமல் ஹாசனின் பழக்கம் கிடைக்க அவருடைய பரிந்திரையின் பெயரிலும், மனோபாலாவின் திறமையின் அடிப்படையிலும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். அதன் பிறகு பாரதிராஜாவின் ஆஸ்தான சீடர்களில் ஒருவராக மாறினார்.
இயக்குநராக மனோபாலா: புதிய வார்ப்புகள், டிக் டிக் டிக் உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாரதிராஜாவிட்ம் உதவி இயக்குநராக இருந்த மனோபாலா ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநரா அடி எடுத்து வைத்தார். அதனையடுத்து ரஜினி, விஜயகாந்த், மோகன் உள்ளிட்ட ஸ்டார்களின் படங்களை இயக்கி முக்கியமான இயக்குநராக மாறினார். பாட்ஷா படத்தை மனோபாலாதான் முதலில் இயக்குவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகராக கலக்கிய மனோபாலா: 2002ஆம் ஆண்டு கடைசியாக நைனா படத்தை இயக்கிவிட்டு படம் இயக்குவதை மூட்டை கட்டி வைத்தார். தொடர்ந்து சீரியல்களை இயக்கிய அவர் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்து இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தயாரிப்பாளராகவும் மூன்று படங்களை தயாரித்த மனோபாலா தற்போது உருவாகிவரும் லியோ, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
உயிரிழந்த மனோபாலா: இந்தச் சூழலில் அவருக்கு கல்லீரல் பிரச்னை ஏற்பட்டு அப்போலோவில் சிகிச்சை எடுத்து வந்தார். அதனையடுத்து வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த மூன்றாம் தேதி தனது வீட்டில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு பலரும் நேரில் சென்று தங்களது அஞ்சலியையும், இரங்கலையும் தெரிவித்தனர். பாரதிராஜா, இளையராஜா என பல பிரபலங்கள் கொஞ்சம் எமோஷனலாகவே இருந்தனர்.
நினைவேந்தல் நிகழ்வு: இந்நிலையில் மனோபாலாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (மே 14) ஞாயிறுக்கிழமை மாலை ஆறு மணியளவில் தியாகராய நகரில் இருக்கும் பி.டி.தியாகராஜா ஹாலில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படவிருக்கிறது. எனவே மனோபாலாவுக்கு நெருக்கமான மற்றும் பிற திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனோபாலா மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்: இதற்கிடையே மனோபாலாவின் உடல் வளசரவாக்கத்தில் இருக்கும் பிருந்தாவன் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து மனோபாலா சமுதாயத்து வழக்கப்படி அவரது உடைமைகளை எரிக்காமல், அனாதை இல்லங்களுக்கு மனோபாலாவின் உடைமைகளை அவரது மனைவி கொடுத்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது குறிப்பிடத்தக்கது.