திருவனந்தபுரம், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக கண்காணிக்கும் வசதியை, அனைத்து காவல் மாவட்டங்களிலும் பெற்று உள்ள முதல் மாநிலமாக கேரளா புதிய சாதனையைப் படைத்துள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
மாநிலத்தில் உள்ள, 20 காவல் மாவட்டங்களிலும், ட்ரோன் வாயிலாக கண்காணிக்கும் வகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் பினராயி விஜயன், ட்ரோன்களை வழங்கினார்.
மேலும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் எதிர்ப்பு மென்பொருளையும் அவர் அறிமுகம் செய்தார்.
இது பற்றி கேரள போலீசின் சைபர்டோம் பிரிவின் ஐ.ஜி.,யான பி.பிரகாஷ் கூறியதாவது:
அனைத்து காவல் மாவட்டங்களிலும் ட்ரோன் வாயிலாக கண்காணிக்கும் வசதியை பெற்றுள்ள முதல் மாநிலமாக கேரளா விளங்குகிறது.
முதல்கட்டமாக, 20 காவல் மாவட்டங்களுக்கும், தலா ஒரு ட்ரோன் வழங்கப்பட்டுள்ளது.
இதை இயக்குவதற்காக, 25 பேருக்கு சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள், ட்ரோன் பைலட் சான்றிதழ் பெற்றுள்ளனர். இதைத் தவிர, 20 பேருக்கு, கேரளாவில் உள்ள ட்ரோன் ஆய்வகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக, ட்ரோன் தடயவியல் ஆய்வகத்தை கேரளாவில் உருவாக்கியுள்ளோம். இதைத் தவிர, ட்ரோன் எதிர்ப்பு மென்பொருளையும் உருவாக்கி உள்ளோம். இதன் வாயிலாக கண்காணிப்பு பணிகளையும், இயற்கை சீற்றங்களின்போது மீட்பு பணிகளையும் சிறப்பாக செயல்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்