நாடு முழுதும், சிறைத் துறையில் பின்பற்றப்பட்டு வரும் ஆங்கிலேயர் காலத்து, 130 ஆண்டு கால பழமையான சட்டத்தை மாற்றி, நவீன அணுகுமுறையுடன் கூடிய புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுதும் உள்ள சிறைகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளில் துவங்கி, சிறைக் கைதிகளுக்கான தனிப்பட்ட பிரச்னைகள் வரை, சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டு மென்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
ஆலோசனை
நாட்டில் தற்போது, ‘சிறைத் துறை சட்டம் – 1894’ தான் நடைமுறையில் உள்ளது. இதில் உள்ள சட்ட விதிகள் அனைத்துமே, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது அறிமுகப்படுத்தப் பட்டவை.
இந்த பழைய நடைமுறைகளால், கைதிகள் மட்டுமின்றி, அரசு, போலீஸ், நீதித் துறை ஆகிய மூன்று தரப்புமே பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், சிறைத் துறையில் பின்பற்றப்படும் விதிமுறைகளை மாற்றி, நவீன காலத்துக்கு ஏற்ப விதிகளை வகுக்கும் பணியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனையின் படி, கடந்த சில ஆண்டுகளாக, உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, ‘மாதிரி சிறைகள் சட்டம் – 2023’ என்ற தலைப்பில் விரிவான சட்ட நடைமுறைகளை, உள்துறை அமைச்சக அதிகாரிகள் இறுதி செய்துள்ளனர்.
இந்த புதிய சட்ட வடிவம், 130 ஆண்டுகளுக்குப் பின், சிறைகள், அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள், அவர்களை பராமரிக்கும் சிறைத் துறை அதிகாரிகள், அலுவலர்கள் என அனைவரையும் உள்ளடக்கியதாக உருவாகி உள்ளன.
பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், சிறுவர்கள் ஆகியோரை சிறைக்குள் அடைத்து வைப்பதிலும், அவர்களை கையாள்வதிலும், முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் கூடியதாக விதிகள் வகுக்கப்பட்டு உள்ளன.
விதிமுறை
தடை செய்யப்பட்ட மொபைல் போன் பயன்படுத்தும் கைதிகள், வார்டன்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் தண்டனைகள் மற்றும் பரோல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் விதிமுறைகள் நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டு உள்ளன.
‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக கைதிகளுடன் விசாரணை நடத்துவது மற்றும் கைதிகளின் மறுவாழ்வுக்காக சிறைக்குள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், சிறைத் துறைக்கென இருக்கும் விரிவான பங்களிப்புகளும் அந்த புதிய விதிமுறைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளன.
– நமது டில்லி நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்