ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியில் அமர்த்தக்கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் 5 நாட்களாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நாம் தமிழர், பாட்டாளி மக்கள் கட்சியினர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மறுநியமன போட்டித்தேர்வுகள் இன்றி நேரடியாகப் பணியமர்த்த வேண்டும் என்று தமிழக அரசை வலியறுத்தி வந்தனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில் இன்று சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களுடன் அமைச்சர் பொன்முடி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஆசிரியர்கள், TET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தகுதி தேர்வு நடத்தப்படும் என்ற அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு அமைச்சர் பொன்முடி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட ஆசிரியர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.
இந்நிலையில் இந்த நிகழ்வு மகிழ்ச்சி அளிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். அதுகுறித்து அவர் ட்விட்டரில், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணி நியமனத்திற்காகப் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியப் பெருமக்களை நேற்று நேரில் சந்தித்திருந்தேன். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சென்னைக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் துயரங்கள் மிகவும் வருத்தத்துக்குரியது.
ஆசிரியப் பணியை நோக்கமாகக் கொண்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும், பல ஆண்டுகள் காத்திருந்தும், அதற்கான பலன் கிடைக்காமல், பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது.
அமைச்சர் பொன்முடி , போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியப் பெருமக்களை நேரில் சந்தித்து, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒரு வாரத்திற்குள்ளாக அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமென்று, அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்’ என இவ்வாறு கூறியுள்ளார்.