சென்னை: ஆன்லைன் விளம்பரம் மூலம் 30 ஆயிரம் பணமோசடி செய்த கும்பலால், சென்னையைச் சேர்ந்த இளம் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து தனிப்படை போலீசாரை வடசென்னை போலீஸ் இணை கமிஷ்னர் ரம்யா பாரதி பாராட்டினார்.
சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவை சேர்ந்த சாந்தி என்பவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மகாலட்சுமிக்கு வயது 19 ஆகிறது.
மகாலட்சுமி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் மகாலட்சுமி, இன்ஸ்டாகிராமில் வந்த ஆன்லைன் விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் வந்த ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனால் அதிக பணம் கிடைக்கும் என நம்பி ரூ.35 ஆயிரம் வரை பணம் கட்டி இழந்துள்ளார் மகாலட்சுமி. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கல்லூரி மாணவி மகாலட்சுமி கடந்த மாதம் 2-ந் தேதி வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சபியுல்லா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனிடையே ஆன்லைன் மோசடியால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க வடசென்னை போலீஸ் இணை கமிஷனர் ரம்யா பாரதி உத்தரவின் பேரில், பூக்கடை மாவட்ட போலீஸ் துணை கமிஷனர் ஆல்பர்ட் ஜான் மற்றும் உதவி கமிஷனர் வீரக்குமார் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபியுல்லா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் கடந்த 28-ந் தேதி கொல்கத்தா விரைந்தனர். கொல்கத்தாவில் சுமார் 10 நாட்களுக்கு மேல் தங்கி விசாரணை நடத்தினர். அதில் ஆன்லைனில் பணம் மோசடி செய்த மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த அமுலுல்லா கான் (20), முகமது பைசல் (21), முகமது ஆசிப் இக்பால் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னையில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைன் பணம் மோசடி செய்த கும்பலை விரைந்து பிடித்த தனிப்படை போலீசாரை வடசென்னை போலீஸ் இணை கமிஷனர் ரம்யா பாரதி பாராட்டினார்.