உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் 18வது ரோஜா காட்சி இன்று தொடங்கப்பட்டது. 50 ஆயிரம் ரோஜக்களால் ஆன ஈபிள் கோபுரம் உட்பட பல்வேறு வடிவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் விஜயநகரத்தில் ரோஜா பூங்கா 11 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு முதல் இந்த பூங்காவில் நீலகிரி தோட்டக்கலைத்துறை மற்றும் ரோஜா சங்கம் சார்பில் ரோஜா காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு 18வது ரோஜா காட்சி இன்று தொடங்கியது. ரோஜா காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். 18வது உதகை ரோஜா காட்சியின் சிறப்பம்சமாக பல வண்ண ரோஜாக்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஈபிள் கோபுரம், விளையாட்டு உபகரணங்கள், செல்ஃபி ஸ்பாட், ரகு, பொம்மி உருவங்கள், உதகை 200 ஆகிய வடிவமைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
இக்காட்சியில் இதர மாவட்டங்களான திருநெல்வேலி, திருப்பூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்ட தோட்டக்கலைத்துறையினரால் ரோஜா மலர்களைக் கொண்டு வீணை, பட்டாம்பூச்சி ஆகிய வடிவங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், இக்காட்சியில் சுற்றுலா பயணிகளை குதுகலிக்கும் விதமாக தோட்டக்கலைத்துறையின் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. நாளை மாலை நடைபெற உள்ள விழாவில் சிறந்த பூங்கா, மலர் மற்றும் தோட்டங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.