லக்னோ: உத்தர பிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 17 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது. இதர உள்ளாட்சி அமைப்புகளில் பெருவாரியான இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
உத்தர பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 4, 11-ம்தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதன்படி, 17 மாநகராட்சிகள், 199 நகராட்சிகள், 544 பஞ்சாயத்து அமைப்புகளில் உள்ள 14,864 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில், வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், லக்னோ, ஆக்ரா, மொராதாபாத், சஹரான்பூர், மதுரா, கோரக்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி, மீரட், பெரோஸாபாத், பரேலி, அலிகர், காஜியாபாத், அயோத்தி, ஷாஜகான்பூர், கான்பூர், ஜான்சி ஆகிய17 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளையும் ஆளும் பாஜக கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.
மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளில் 808 இடங்களை பாஜக கைப்பற்றியது. சமாஜ்வாதி 191, பகுஜன் சமாஜுக்கு 85 மாநகராட்சி கவுன்சிலர் பதவிகள் கிடைத்தன. இதர கட்சிகள், சுயேச்சைகள் 330 இடங்களைப் பெற்றன.
நகராட்சி தலைவர் பதவிகளில் 88 இடங்களை பாஜக கைப்பற்றியது. சமாஜ்வாதிக்கு 35, பகுஜன் சமாஜுக்கு 17 பதவிகள் கிடைத்தன. இதர கட்சிகள், சுயேச்சைகள் 59 பதவிகளை பெற்றன.
நகராட்சி கவுன்சிலர் பதவிகளில் ஆளும் பாஜக 1,228, சமாஜ்வாதி, 388, பகுஜன் சமாஜ் 174 இடங்களை பெற்றன. இதர கட்சிகள், சுயேச்சைகள் 2,827 இடங்களைப் பெற்றுள்ளன.
பஞ்சாயத்து தலைவர் பதவிகளில் பாஜக 181, சமாஜ்வாதி 73, பகுஜன் சமாஜ் 31 பதவிகளை கைப்பற்றின. இதர கட்சிகள், சுயேச்சைகள் 223 இடங்களை பெற்றன.
பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளில் பாஜக 1,338, சமாஜ்வாதி 458, பகுஜன் சமாஜ் 198 இடங்களை கைப்பற்றின. இதர கட்சிகள்,சுயேச்சைகள் சார்பில் 3,966 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேயர் வேட்பாளர் போராட்டம்: கோரக்பூர் மேயர் பதவிக்கு பாஜக சார்பில் மங்கலேஷ் ஸ்ரீவஸ்தவா, சமாஜ்வாதி சார்பில் காஜல் நிஷாத் போட்டியிட்டனர். இதில் மங்கலேஷ் 2.14 லட்சம் வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.காஜலுக்கு 1.47 லட்சம் வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, காஜல் போராட்டத்தில் ஈடுபட்டார். ‘‘தேர்தலில் பதிவானவாக்குகளைவிட கூடுதலாக 1.5 லட்சம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. எனவே, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்’’ என்று அவர் வலியுறுத்தினார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் இதே கோரிக்கையை முன்வைத்தார்.
ஆனால், இதை மாநில தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. பாஜக வேட்பாளர் மங்கலேஷ் வஸ்தவா வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள காங்கிரஸுக்கு, உத்தர பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கு பாஜக – சமாஜ்வாதி இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களிடம் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியபோது, ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் உத்தர பிரதேசம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்கிறது. இரட்டை இன்ஜின் அரசால் வளர்ச்சி திட்டங்கள் வேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதற்கு பிரதிபலனாக, உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் பரிசாகவழங்கியுள்ளனர். இதுவரை இல்லாத வகையில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. இதற்காக, மக்களுக்கு நன்றி. கட்சியின் வெற்றிக்காக உழைத்த தொண்டர்களுக்கு வாழ்த்துகள்’’ என்றார்.
அயோத்தி மேயர் தேர்தலில் கோயில் மடாதிபதி வெற்றி: உத்தர பிரதேசம் அயோத்தி மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக சார்பில் தீன் கைலாஷ் திவாரி கோயிலின் மடாதிபதி கிரிஷ் பதி திரிபாதி (49) போட்டியிட்டார். இவர் 70,644 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து களமிறங்கிய சமாஜ்வாதி வேட்பாளர் ஆசிஷ் பாண்டேவுக்கு 38,500 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. பகுஜன் சமாஜ் 12,275, ஆம் ஆத்மி 3,848, காங்கிரஸ் 3,544 வாக்குகள் பெற்றுள்ளன.
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு துறை சார்ந்த பட்டம் பெற்ற கிரிஷ் பதி திரிபாதி, இளம் வயதில் ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார். அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தீவிர பிரச்சாரம் செய்து வந்தனர். டெல்லியில் தங்கியிருந்த கிரிஷ் பதி திரிபாதி, தந்தையின் மறைவால் அயோத்திக்கு திரும்பினார். அப்போது தீன் கைலாஷ் திவாரி கோயிலின் மடாதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் அயோத்தி மேயர் ஆகியுள்ளார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூர் மடத்தின் மடாதிபதியாக உள்ளார். அவரை பின்பற்றி கிரிஷ் பதி திரிபாதியும் அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.