தாஷ்கென்ட்,
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடக்க இருந்த 57 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் முகமது ஹூசாமுதீன், கியூபாவின் சைதேல் ஹார்டாவை சந்திக்க இருந்தார்.
ஆனால் கால்இறுதி சுற்றின் போது முழங்காலில் காயம் அடைந்த ஹூசாமுதீனை களம் இறங்க வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதால் அவர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். இதனால் தெலுங்கானாவை சேர்ந்த 29 வயதான ஹூசாமுதீன் வெண்கலப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது. இது அவருக்கு அறிமுக உலக போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. கியூபா வீரர் சைதேல் ஹார்டா போட்டியின்றி இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும் 51 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் தீபக் போரியா, உலக போட்டியில் 2 முறை வெண்கலப்பதக்கம் வென்றவரான பிலாலா பெனாமாவை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். இருவரும் கடுமையாக மல்லுக்கட்டிய இந்த போட்டியில் அரியானாவை சேர்ந்த தீபக் போரியா 3-4 என்ற கணக்கில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கம் பெற்றார்.
இதேபோல் 71 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் நிஷாந்த் தேவ், ஆசிய சாம்பியன் அஸ்லான்பெக் ஷாம்பெர்ஜெனோவிடம் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கம் பெற்றார். ஒரு உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 3 பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.