சென்னை : ரேஷனில் இலவச பொருட்கள் பெறும் ரேஷன் கார்டுதாரர்கள், அதற்கான புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டியது கட்டாயம். இல்லையெனில், அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அதோடு, அரசு விதிமுறைகளை மீறியதற்காக குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மலிவு விலையிலும் இலவசமாகவும் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.
பல ரேஷன் கார்டுதாரர்கள் தகுதியில்லாமல், இலவச ரேஷனை பயன்படுத்தி வருவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அதே நேரத்தில், தகுதியுள்ள பல ரேஷன் அட்டைதாரர்கள் அரசு திட்டங்களின் பலனைப் பெறவில்லை. இதுபோன்ற சூழலில் தகுதியில்லாதவர்கள் ரேஷன் கார்டுகளை உடனடியாக ஒப்படைக்க அதிகாரிகள் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் தகுதிக்கான நிபந்தனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் தகுதியற்றவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றன. ஒருபுறம் தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் பச்சை ரேஷன் கார்டுகளில் ஏராளமானோர் சேர்க்கப்படுகின்றனர்.
புதிய மாற்றங்களின்படி, இந்த பலன்களை பெற ஒருவருக்கு 100 சதுர மீட்டருக்கு மேல் நிலம் இருக்கக்கூடாது. குடும்பத்தின் எந்தவொரு உறுப்பினரும் அரசாங்க வேலையில் இருக்கக் கூடாது. பிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம் அல்லது டிராக்டர் இருந்தாலோ, குடும்ப வருமானம் கிராமத்தில் இரண்டு லட்சத்துக்கும், நகரத்தில் மூன்று லட்சத்துக்கும் மேல் இருந்தாலோ அவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
அப்படிப்பட்டவர்கள் ரேஷன் கார்டை தாலுகா மற்றும் டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ரேஷன் கார்டை ஒப்படைக்கவில்லை என்றால், விசாரணைக்கு பின், ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அத்துடன், அரசு விதிமுறைகளை மீறியதற்காக குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி, அதுவரை பெற்ற இலவச ரேஷன் பொருட்களுக்கான பணம் வசூலிக்கப்படும்.