என்னது.. அண்ணாமலை அதிர்ஷ்டம் இல்லாதவரா.. மோடிக்கே டேஞ்சராமே.. கே.சி. பழனிசாமி பேச்சை கவனிச்சீங்களா

சென்னை:
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்திருப்பதை சுட்டிக்காட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி. அண்ணாமலை அதிர்ஷ்டம் இல்லாதவரா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கர்நாடகா சட்டசபை தேர்தலை தமிழ்நாடு உற்று கவனிப்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலையும் முக்கிய காரணம். அங்கு தேர்தல் துணைப் பொறுப்பாளராக டெல்லி பாஜக தலைமை அண்ணாமலையை களம் இறக்கியது. கர்நாடகாவில் பல ஆண்டுகள் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் இருப்பதை கருத்தில்கொண்டு அவருக்கு இந்தப் பொறுப்பை கட்சித் தலைமை வழங்கியது.

தமிழ்நாட்டில் பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றது முதல், கட்சியை வலுப்படுத்த அவர் பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற பேச்சு அடிபட்டுக் கொண்டே இருக்கிறது. அதேபோல, அதிமுக கூட்டணியை முறிக்கும் விதமாக சமீபகாலமாக அவர் பேசிய பேச்சுகளுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு இருந்தது. மேலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து பாஜகவினர் சிலரே டெல்லி தலைமைக்கு ரிப்போர்ட் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆளுமையை நிரூபிக்க வாய்ப்பு:
இருந்தபோதிலும், அண்ணாமலை மீதான நம்பிக்கையை பாஜக தலைமை இழக்கவில்லை. அதன் வெளிப்பாடாகவே, கர்நாடகாவில் தேர்தல் துணைப் பொறுப்பாளராக கட்சித் தலைமை அவரை நியமித்தது. அத்துடன், கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 86 தொகுதிகள், அண்ணாமலை வசம் ஒப்படைக்கப்பட்டன. இதனால் தனது திறமையையும், ஆளுமையையும் நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் அண்ணாமலைக்கு ஏற்பட்டது.

படுதோல்வி.. அதிருப்தி..:
இதன் காரணமாக, கர்நாடகாவிலேயே தங்கியிருந்து தீவிர களப்பணி ஆற்றி வந்தார் அண்ணாமலை. வேட்பாளர் தேர்வு, வாக்குறுதிகளை வகுப்பது என முக்கியப் பணிகளை அவர் கவனித்து வந்தார். இவ்வாறு பம்பரமாக சுழன்று வேலை செய்த போதிலும், கர்நாடகாவில் பாஜக படுதோல்வி அடைந்தது. குறிப்பாக, அண்ணாமலை களப்பணியாற்றிய தொகுதிகளில் பெரும்பாலானவற்றை காங்கிரஸ் கைப்பற்றியது. இது அண்ணாமலைக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மேலும், அவர் மீது பாஜக தலைமை தற்போது அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கே.சி. பழனிசாமி ட்வீட்:
இந்நிலையில், கர்நாடகாவில் பாஜக தோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “அதிர்ஷ்டம் இல்லாதவரா அண்ணாமலை? கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கர்நாடகாவில் தேர்தல் இணைப் பொறுப்பாளராக பொறுப்பேற்றார், ஆட்சி பறிபோனது. தற்பொழுது தென் மாநிலங்களில் அதிகமாக அண்ணாமலை முன்னிலைப்படுத்தப்படுகிறார். அவர் தீவிரமாக களப்பணியாற்றி 2024-ல் மோடியின் ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் பறித்துவிடுவாரா?” என கே.சி. பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.