கர்நாடக சட்டமன்றம் 224 தொகுதிகளைக் கொண்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் முடிவுகளை ஒட்டுமொத்த இந்தியாவும் உற்றுநோக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு, கர்நாடக தேர்தல் வெற்றி நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதேயாகும்.
இதன் காரணமாக பா.ஜ.க, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டன. ராகுல் காந்தி, கார்கே, மோடி, அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். இதையடுத்து கர்நாடகாவில் கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
அப்போது 73.91 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதையடுத்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதலில் ஒருசில தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலையில் இருந்தாலும், பிறகு காங்கிரஸ் முன்னிலைக்குச் சென்றது. பகல் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் – 119, பாஜக – 75, ஜனதா தளம் – 23 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன.
எனவே காங்கிரஸின் வெற்றி உறுதியாகிவிட்டது. மறுபுறம், “இந்த வெற்றிக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தான் காரணம்… எனவே அவரை முதல்வராக்க வேண்டும்” என பலரும் கூறி வருகின்றனர். ட்விட்டரிலும் #DKForCM என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
காங்கிரஸின் இந்த வெற்றிக்கு சிவக்குமாரின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
யார் இந்த டி.கே.சிவக்குமார்?!
கர்நாடக மாநிலதில் இருக்கும் ராம்நகர் மாவட்டம், கனகபுராவை அடுத்துள்ள தொட்டாலஹள்ளியைச் சேர்ந்தவர் டி.கே.சிவக்குமார். இவர் பணக்கார விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே துணிச்சல் மிகுந்தவராக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளின்மீது தீவிர பற்று ஏற்பட்டதால், பெங்களூரு ஆர்.சி கல்லூரியில் படிக்கும்போதே காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் மாணவர், இளைஞர் காங்கிரஸ் தேர்தல்களில் போட்டியிட்டார். தொடர்ந்து அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
அந்த மாநிலத்தில் லிங்காயத், ஒக்கலிகா சமூகங்களின் வாக்குகள் மிக முக்கியமானதாக இருக்கின்றன. அந்த மாநிலத்தின் மக்கள்தொகையில் 11 சதவிகிதம் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இருக்கின்றனர். இவர்களின் ஆதரவு மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேவகவுடாவுக்கு அதிகமாக இருந்தது. டி.கே.சிவக்குமாரும், இதே சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.
எனவே இவரை வைத்து ஒக்கலிகா வாக்குகளைப் பெறுவதற்கு காங்கிரஸ் வியூகம் வகுத்தது. 1985-ல் முதல் தேர்தலிலேயே முன்னாள் பிரதமர் தேவகவுடாவை எதிர்த்துப் போட்டியிட்டார். அதில் தோல்வியடைந்தார். பிறகு 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சாதன்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் கர்நாடக காங்கிரஸில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்.
இதையடுத்து எப்படியும் டி.கே.சிவக்குமாரை வீழ்த்தியாக வேண்டும் என தேவகவுடா முடிவுசெய்தார். அதன்படி 1999-ல் தேவகவுடா தன் மகன் குமாரசாமியை சாத்தனூர் தொகுதியில் நிறுத்தினார். ஆனால் அவரை 56,000 வாக்குகள் வித்தியாசத்தில் டி.கே.சிவக்குமார் தோற்கடித்தார். இதையடுத்து அவரை ‘சாத்தனூர் சிங்கம்’ என்று காங்கிரஸ் கட்சியினர் அழைக்கத் தொடங்கினர்.
2004-ம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் கனகபுரா தொகுதியில் தேவகவுடாவுக்கு எதிராக தனது ஆதரவாளர் தேஜஸ்வி ரமேஷை நிறுத்தி வெற்றி பெற்றார். இதையடுத்து அவரது செல்வாக்கு அதிகரித்தது. மேலும் பெல்லாரியில் தனது ஆதரவாளரான உக்ரப்பாவை வெற்றிபெற வைத்து, ரெட்டி சகோதரர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
முன்னதாக 2001-ல் மகாராஷ்டிராவில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது அந்த மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பெங்களூருவிலிருக்கும் ரெசார்ட்டில் பாதுக்காப்பாக வைத்து ஆட்சியைக் காப்பாற்றினார். இதனால் காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராக மாறினார்.
இதேபோல் 2017-ம் ஆண்டு குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் அகமது படேலை வெற்றி பெற வைக்க சோனியா காந்தி முடிவெடுத்தார். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை, பா.ஜ.க-வின் பக்கம் இழுக்கும் வேலையில் தீவிரம் காட்டினார், அமித் ஷா. இதையடுத்து அவர்களை தனி விமானம் மூலமாக பெங்களூருவுக்கு அழைத்துவந்து, அகமது படேலை ஜெயிக்க வைத்தார். பின்னர் சோனியா காந்திக்கு நம்பிக்கைக்குரிய நபராக மாறிப்போனார்.
இதையடுத்து அவர்மீது தொடர்ச்சியாக வருமானவரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை, சி.பி.ஐ சோதனை, மத்திய குற்றப் பிரிவு விசாரணைகள் நடத்தப்பட்டன. பண மோசடி வழக்குப் பதிவுசெய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். நேஷனல் ஹெரால்டு வழக்கிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் இதையெல்லாம் அவர் பொருட்படுத்திக்கொள்ளவில்லை.
ராகுல் காந்தியின் பாதயாத்திரையை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தார். முன்னதாக 2018-ம் ஆண்டு தேர்தலில் கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் ம.ஜ.த – காங்கிரஸ் கூட்டணி அரசு அமைத்தது. அப்போது எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்குச் சென்றுவிடாமல் டி.கே.சிவக்குமார் தடுத்ததாலேயே, அந்த ஆட்சி ஓராண்டை நிறைவு செய்தது.
இதேவேகத்தில்தான் 2023 தேர்தலிலும் காங்கிரஸை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இதற்கான பணியை 6 மாதங்களுக்கு முன்பே, அவர் தொடங்கிவிட்டார். ஒவ்வொரு பகுதியிலும் நேரடியாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபாட்டார்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், “பஜ்ரங் தள் அமைப்புக்குத் தடைவிதிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தது. இதற்கு பா.ஜ.க-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸ் கட்சிக்கு, முன்பு ராமர் பிரச்னையாக இருந்தார்.
இப்போது அவர்கள் ஹனுமனைப் பிரச்னையாக்கி, தேர்தல் அறிக்கையில் அடைத்திருக்கிறார்கள். அதனால்தான், `பஜ்ரங் தள் அமைப்பு தடைசெய்யப்படும்’ என்று தெரிவித்திருக்கின்றனர். நான் இன்று ஹனுமனின் பூமியில் காலடி எடுத்துவைத்த அதே நாளில் காங்கிரஸ் கட்சியின் துரதிஷ்டவசமான அறிவிப்பைக்கொண்ட தேர்தல் அறிக்கை வெளியாகியிருக்கிறது” என்று பேசினார்.
இதையடுத்து காஸ் சிலிண்டருக்கு பூஜை செய்து `ஜெய் காஸ் சிலிண்டர்’ என தேர்தல் பிரசார ட்ரெண்டை மாற்றினார், டி.கே.சிவக்குமார். மேஜையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டருக்கு மாலை அணிவித்து, தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள் வைத்து, சிவக்குமார் சிலிண்டர் முன்பு கற்பூரம் ஏற்றி ஆரத்தி செய்து வணங்கினார்.
அப்போது அவர், ” `வாக்களிக்கச் செல்லும் முன்பு சிலிண்டரைப் பார்க்க வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதையே பின்பற்றுமாறு நான் மக்களை கேட்டுக்கொள்கிறேன். விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்குச் சாவடிகளிலிருந்து 100 மீட்டர் தொலைவில் ஒரு சிலிண்டரை வைத்திருக்க வேண்டும்” என்றார்.
பின்னர் கடந்த 12-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், “எனக்கு தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. நான் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகளை மட்டுமே நம்புவேன். நான் முதலிலிருந்தே நாங்கள் 146 இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறி வருகிறேன்.
அதே எண்ணிக்கையில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். எனவே தொங்கு சட்டப்பேரவை குறித்தோ, ம.ஜ.த-வுடன் கூட்டணி குறித்தோ பேச வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வென்று காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி” என்றார். அதன்படி காங்கிரஸ் வெற்றியும் பெற்றிருக்கிறது.
இது குறித்துப் பேசிய அவர், “கர்நாடகாவை நான் காப்பாற்றுவேன் என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு உறுதியளித்தேன். சிறையில் என்னைச் சந்திக்க சோனியா காந்தி வந்ததை என்னால் மறக்க முடியாது. காங்கிரஸ் அலுவலகம் எங்கள் கோயில். அடுத்தகட்ட நடவடிக்கையை காங்கிரஸ் அலுவலகத்தில் முடிவுசெய்வோம்.
மூன்று வருடங்களாக தூங்கவில்லை. என்னுடைய தலைவர் சோனியா காந்திக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் என்மீது நம்பிக்கை வைத்தார். சித்தராமையா உட்பட எனது மாநிலத்திலுள்ள அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இது எனது வெற்றி மட்டும் அல்ல” என்றார்.
தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கப் போகிறது என்பது உறுதியாகிவிட்ட நிலையில், யார் முதல்வர் என்ற கேள்வி நாலாப்பக்கமும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது… ஆட்சி அரியணையை அலங்கரிக்கப்போவது டி.கே.சிவக்குமாரா… சித்தராமையாவா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.