சிறார் மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பியோடிய 7 சிறுவர்கள் – 5 பேர் மீட்பு.!!
சென்னையில் உள்ள ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறையின் அங்கீகாரம் பெற்ற போதை மறுவாழ்வு சிறார் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், போதைப் பழக்கத்திற்கு அடிமையான சிறுவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் மொத்தம் பதின்மூன்று சிறார்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஏழு சிறுவர்கள் நேற்று முன்தினம் மையத்திலிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதையறிந்த மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே தப்பித்துச் சென்ற ஏழு பேரில் ஐந்து சிறுவர்கள் தங்கள் வீட்டுக்கு சென்றதால் அவர்களுடைய பெற்றோர் மீண்டும் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வந்து விட்டுள்ளனர்.
இந்த நிலையில், போலீசார் தப்பித்து ஓடிய மேலும் 2 சிறுவர்களை தேடி வருகின்றனர். சிறார் மறுவாழ்வு மையத்திலிருந்து ஏழு சிறுவர்கள் தப்பித்து ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.