சீர்மிகு ஆளுமை திட்டத்தின் கீழ் மக்கள் சேவைக்கான ‘க்யூஆர்’ குறியீடு செயலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சீர்மிகு ஆளுமை திட்டத்தின் கீழ்மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்காக ‘க்யூஆர்’ குறியீடு செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான ‘விரைவு துலங்கல் (க்யூஆர்) குறியீடு’ மென்பொருள் செயலியை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஈரக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்துக்கு ‘செழிப்பு’ என பெயரிட்டு அதன் விற்பனையை அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர்ஆர்.பிரியா, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு நிர்வாக செயல்பாடுகளில் டிஜிட்டல் மயமாக்குதல் என்பது வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் துறைதோறும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ‘க்யூஆர்’ குறியீடு மென்பொருள் செயலி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘க்யூஆர்’ குறியீடு ஒவ்வொரு கட்டமைப்புகளின் முகப்புகளிலும் பயன்படுத்தத்தக்க வகையில் உள்ளாட்சி ஊழியர்களால் ஒட்டப்படும்.

இதன்மூலம் பொதுமக்கள் உள்ளாட்சி சேவைகளின் மீதான நிறைகுறைகளை தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால் உள்ளாட்சி ஊழியர்கள் தங்களது பணியை மேம்படுத்தி மக்களுக்கு திருப்திகரமான சேவைகளை செய்திட வழிவகுக்கும்.

சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரி நிலுவைகளைப் பற்றிய அறிவிப்பை பெற்று செயலிமூலமே தொகையை செலுத்தலாம். பிறப்பு, இறப்பையும், வீட்டிலிருந்தவாறே ‘க்யூஆர்’ குறியீட்டை ஸ்கேன்செய்து பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் புகார் / கோரிக்கைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த விவரங்கள், அவற்றின் நிலை பற்றியும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.

அத்துடன், உள்ளாட்சி கட்டமைப்புகளான, பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், எரியூட்டு மயானம், மார்க்கெட், விளையாட்டு மைதானம், நகர்நல மையம், கழிப்பறைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ள ‘க்யூஆர்’ குறியீடு மூலம் பொதுமக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தால் உள்ளாட்சிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அக்கட்டமைப்புகளை மேலும் நல்ல முறையில் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ‘க்யூஆர்’ குறியீடு மூலம் தெரிவிக்கும் கோரிக்கைகள் / புகார்கள் அனைத்தும் உள்ளாட்சிஅலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஒருங்கிணைந்தமுறையில் பெறப்படும். பின்புஅவை தொடர்புடைய அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்படுவதால் பொதுமக்களுக்கான சேவைகள் அனைத்தும் இந்த சீர்மிகு ஆளுமை திட்டத்தின் மூலம் முழுமையாக செயல்படுத்தப்படும்.

‘செழிப்பு’ இயற்கை உரம்: ஈரக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்துக்கு‘செழிப்பு’ என பெயரிட்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து நகர்ப்புர உள்ளாட்சிகளிலும் நாளொன்றுக்கு 15 ஆயிரம் டன்குப்பை சேகரம் ஆகிறது.

மாநகராட்சிகளில் 629 இடங்களில், நகராட்சிகளில் 334 இடங்களில் மற்றும் பேரூராட்சிகளில் 489 இடங்களிலும் உள்ள நுண் உர மையங்கள் மற்றும் காற்றாடல் மையங்களில் மக்கும் குப்பை அறிவியல் முறையில் செயலாக்கம் செய்யப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. இந்த உரம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விநி யோகம் செய்யப்படவுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.