சென்னை: மோகா புயல் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில், “மோகா புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று 14.05.2023 நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக் கூடும். அந்த சமயத்தில் 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக 13.05.2023 முதல் 16.05.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் சில இடங்களில் மழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோகா புயல் காரணமாக வங்கதேசம் மற்றும் மியான்மரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.