திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றம்: காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: “பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது” என்று கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தியை, நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.

திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்”, என்று அவர் பதிவிட்டுள்ளார்.


— M.K.Stalin (@mkstalin) May 13, 2023

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.