திருவள்ளூர் : ஆரணி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது.!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி காவல் நிலைய போலீசார் நேற்று ரோந்து பணி ஈடுபட்டிருந்தனர். அப்போது, அகரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில், இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்பொழுது, அவர்களிடம் சுமார் 500 கிராம் எடையுள்ள கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்த வாலிபர்கள் ஆரணி, சுப்பிரமணிய நகரைச் சேர்ந்த சந்தோஷ்சிவம், நரேஷ் என்பது தெரியவந்தது.
இதேபோல், போலீஸார் ஆரணி சமுதாயக்கூடம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அப்பொழுது அந்த வாலிபரிடம் இருந்து சுமார் 300 கிராம் எடை கொண்ட கஞ்சாவை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சின்னக்கிளாம்பாக்கம் கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த தினேஷ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மூன்று வாலிபர்களையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி மூன்று வாலிபர்களையும் புழல் சிறையில் அடைத்தனர்.