'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தடை விதித்தது ஏன்?: மேற்கு வங்க மாநில அரசிடம் விளக்கம் கேட்கிறது உச்சநீதிமன்றம்
இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மே 5ந் தேதி வெளியானது அடா சர்மா, சித்தி இத்னானி உட்பட பலர் நடித்திருந்தனர். கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்டது இந்த படம் 44 கட்டுகளுடன் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் ஓரிரு நாட்கள் திரையிடப்பட்டு பின்னர் தியேட்டர்கள் மூலம் திரையீடு தடுக்கப்பட்டது. படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்தது. படத்தால் எங்கள் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், இது மாதிரி படங்களுக்கு பாரதிய ஜனதாக கட்சி நிதி உதவி செய்கிறது என்று முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்ததது. “அரசால் தணிக்கை செய்யப்பட்டு வெளியிட அனுமதிக்கப்பட்ட படம் நாடு முழுவதும் திரையிடப்படும்போது மேற்கு வங்க அரசு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்'' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதோடு இதுகுறித்து விளக்கம் கேட்டு மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதோடு படத்திற்கு பாதுகாப்பு வழங்காத தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.