தூத்துக்குடியில் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகே சிவலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன்கள் மகேஷ், அருண். இவர்கள் இருவரும் அதே ஊரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகன் சுதனுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள கண்மாய் அருகே விளையாடி கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது திடீரென சிறுவர்களை காணவில்லை. அவர்கள் சென்ற மிதிவண்டி மட்டும் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் சிறுவர்களை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், சிறுவர்கள் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்த கண்மாயில் சென்று பார்த்த போது சிறுவன் அருணின் உடல் மிதந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கண்மாயில் இறங்கி சிறுவர்களின் உடல்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உயிரிழந்த சிறுவர்களுக்கு இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு குறிப்பில், “கடந்த 12ம் தேதி அன்று மாலை தூத்துக்குடி மாவட்டம் சிவலார்பட்டி கண்மாயில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், அவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்றுத் தெரிவித்துள்ளார்.