சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், மேயர் சிட்டிபாபு மேம்பாலத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அப்போது, “என்னைப் பொறுத்தவரைக்கும், நான் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை சந்திக்கக்கூடியவன் அல்ல. அப்போது மட்டும் உங்களையெல்லாம் சந்தித்து பேசுபவனல்ல. நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். எதிர்க்கட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில், கொளத்தூர் தொகுதி முழுவதும், மக்களுடைய தேவைகள் என்ன? பிரச்சனைகள் என்ன? என்பதை நேரடியாக மக்களிடத்தில் கேட்க வேண்டும் என்று முடிவு செய்து, “பேசலாம் வாங்க” என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்தினோம். அதையெல்லாம், அரசு அதிகாரிகளிடம் கொண்டு சென்று முடிந்த அளவிற்கு எல்லாவற்றையும் நிறைவேற்றும் வாய்ப்பில்லை. அதில் எதை, எதையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அந்த அதிகாரிகளை பயன்படுத்தி அந்த நிகழ்ச்சிகளை நாம் நிறைவேற்றினோம்.
2015ல் நடந்த “பேசலாம் வாங்க” நிகழ்வின் போது, எல்.சி.1 பாலப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள். அதன்படி, 2017ல் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அனுப்பிய கடிதம் மூலமாக எல்.சி.1 ரயில்வே மேம்பாலத்திற்கான சென்னை மாநகராட்சியின் ஒப்புகை அளிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 2017-ல் அதற்குரிய அனுமதி கிடைத்தது.
இந்தத் தொகுதியினுடைய முக்கியமான தேவையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக 2014-ல் ஆய்வுப் பணியை மேற்கொண்டோம். 2017-ல் ஆய்வுப் பணியை தொடர்ந்து மேற்கொண்டோம். அதற்கு பிறகு ரயில்வே துறையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து 50 சதவீதம், 50 சதவீதம் இந்த செலவினைப் பகிர்ந்துகொண்டு, மேற்கொள்ளும் இந்த மேம்பாலப் பணிக்கு 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. எப்போது தொடங்கி, எப்போது வருகிறது பாருங்கள். ஆனாலும் பணிகள் விரைவாக நடைபெற்றதா? இல்லை, தாமதமாகத்தான் நடந்து கொண்டிருந்தது.
அதற்கு பின்னால், 2021-ல் சட்டமன்றத் தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியை பெற்று, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றிருக்கிறது. நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தக் கனவு, இந்த பாலம் கட்டக்கூடிய கனவு விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தி, பணிகளை வேகப்படுத்தியதன் காரணமாக, மேம்பாலப் பணிகள் நிறைவு கட்டத்திற்கு வந்தது. கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதியன்றுகூட மேம்பாலப் பணிகளை நான் ஆய்வு செய்தேன்.
உங்களின் நீண்டகால கனவு, இன்று நனவாகியிருக்கிறது. இது கொளத்தூர் தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல, அருகில் இருக்கக்கூடிய வில்லிவாக்கம் தொகுதி மக்களுக்கும் பெரும் பயனளிக்கக்கூடிய வகையில் இந்த மேம்பாலம் அமைந்திருக்கிறது. இந்த மேம்பாலத்திற்கு என்ன பெயர் சூட்டலாம் என்று அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் நேரு என்னிடத்தில் கேட்ட நேரத்தில், உடனே மேயர் சிட்டிபாபு பெயர் சூட்டவேண்டும் என்று நான் சொன்னேன். நான் மேயராக இருந்தபோது 10 பாலங்களை கட்டவேண்டும் என்று சொல்லி, இங்கே நேரு பேசுகிறபோது சொன்னார்.
10 பாலங்களை கட்டுவதாக முடிவு செய்து, 9 பாலங்களை கட்டி முடித்தோம். அதுவும் குறித்த நேரத்திற்கு முன்பே. மிச்சப்படுத்திய தொகையை கூட கொஞ்சம் குறைத்து சொல்லிவிட்டார். 9 கோடி ரூபாய் என்று சொன்னார். 94 கோடி மதிப்பிலான பாலங்களை கட்ட 33 கோடி ரூபாய் மிச்சப்படுத்தியிருக்கிறோம். ஒரு வருடத்தில் கட்டவேண்டிய பாலத்தை 10 மாதத்தில் கட்டிமுடித்தோம். இன்றைக்கு சென்னை மாநகரத்தில், பாலங்கள் இருந்தே போக்குவரத்து நெரிசல் இருக்கிறது என்றால், அந்த பாலங்கள் எல்லாம் இல்லையென்றால் என்னென்ன நிலையில் இருக்கும், சிந்தித்துப் பாருங்கள்.
முதன்முதலில் சென்னையில், மேம்பாலம் என்று கட்டியதே அண்ணா மேம்பாலம்தான், கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது. அந்த அண்ணா மேம்பாலம் இல்லையென்றால், என்ன நிலை? அண்ணா இல்லையென்றாலே நம்முடைய நிலை வேறு நிலையில் போயிருக்கும். அண்ணா மேம்பாலம் இல்லையென்றால் என்ன நிலை அதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த 10 பாலங்களை நான் மேயராக இருந்தபோது கட்டிய நேரத்தில், அதில் ஒரு தொழில்நுட்ப பிரச்சனை வந்தது, எதில் பெரம்பூர் மேம்பாலத்தில்.
அப்போது மத்திய அமைச்சராக இருந்த, மறைந்த முரசொலி மாறன், எல்லாவற்றையும் கட்டிவிட்டீர்கள், இதை கட்டவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். என்ன தொழில்நுட்ப பிரச்சனைகள் இருந்தாலும் பரவாயில்லை, அது சரி செய்யவேண்டும் என்று சொல்லி, அவரே டெல்லிக்கு பலமுறை சென்று, அங்கிருக்கக்கூடிய அதிகாரிகளிடத்தில் கலந்து பேசி, ஆய்வு நடத்தி, அதற்கு பிறகு ஆட்சி போய்விட்டது. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி வந்தது.
ஆட்சிக்கு வந்த அவர்கள் கட்டி முடித்திருந்தால் 2 மாதத்திலோ, 3 மாதத்திலோ கட்டி முடித்திருக்கலாம். அதை விட்டுவிட்டார்கள். நம் மீது வழக்கு போட்டார்கள்.வழக்கு போட்டார்களே தவிர, இன்னும், FIR-கூட போடவில்லை. எதற்காக சொல்கிறேன் என்றால், அந்த 10-வது பாலம் கட்டுவதில் ஏற்பட்ட சிக்கலை மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் தான் தீர்த்து வைத்தார். அதற்கு பிறகு, அந்த அடிக்கல் நாட்டு விழா எங்கே நடந்தது தெரியுமா? அந்த பெரம்பூர் பாலத்துக்கு அருகிலேதான் நடந்தது. முதலமைச்சராக இருந்த கலைஞர்தான் அடிக்கல் நாட்டி வைத்தார். 9 பாலங்களை திறந்து வைத்தார்.
அந்த பாலத்தில் மட்டும் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்ட காரணத்தினால், காலம் தாழ்ந்து போனது. பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் செய்து முடித்திருக்க வேண்டும், அதற்கு பிறகு மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்து, யார் அடிக்கல் நாட்டி வைத்தார்களோ, அதே முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அந்த பாலத்தை திறந்து வைத்தார். அதுதான் வரலாறு.
அப்போது மேடையில் முதலமைச்சர் கலைஞரிடத்தில், மேயராக இருந்த நான் இந்த வரலாறையெல்லாம் எடுத்துச் சொன்னேன். மறைந்த மாறன் தான் இந்த பாலம் வருவதற்கு காரணமாக இருந்தார் என்று சொன்னவுடன், அந்த பாலத்திற்கு கீழே இருக்கக்கூடிய பூங்காவிற்கு முரசொலிமாறன் பூங்கா என்று பெயர் சூட்டினார். அதுமாதிரி, இந்த பாலம் வருவதற்கு காரணமாக இருந்த இன்றைக்கு நான் உயிரோடு, இந்த மேடையில் நின்று பேசுகிற வாய்ப்பு, முதலமைச்சராக இருந்து, மக்களுக்கு ஆற்றுகிற அந்த கடமை, இந்த வாய்ப்பு எல்லாம் எனக்கு இருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் அண்ணன் சிட்டிபாபுதான்.
நான் அதைத்தான் நினைத்துப் பார்த்து உடனே அவர் பெயரை சொன்னேன். இன்றைக்கு அவருடைய பெயரால், மேயர் சி.சிட்டிபாபு என்ற அந்த பெயரில் இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாலத்திற்கும் பெயர் வைப்பது உண்டு. எத்தனையோ பாலங்களை பார்க்கிறோம்.
எமர்ஜென்சி காலத்தில் மிசா சிறையில் நான், முரசொலிமாறன் அடைக்கப்பட்டிருந்தபோது எங்களோடு ஓர் ஆண்டு காலம் அடைபட்டிருந்தவர் அண்ணன் சிட்டிபாபு. என் மீது விழ இருந்த அடிகளை அவர் மட்டும் குறுக்கே பாய்ந்து தடுத்திருக்காவிட்டால், நான் இல்லை. இன்றைக்கு உங்கள் முன்னால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் இருக்கிறேன் என்று சொன்னால், அந்த நன்றி உணர்வு பெருக்கோடுதான் இந்த பாலத்திற்கு மேயர் சிட்டிபாபு என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது தவிர வேறு அல்ல.
ஏறத்தாழ 10 வருடங்களாக இந்த பாலத்திற்காக காத்துக் கொண்டிருந்தோம். நாம் எதிர்பார்த்திருந்த திட்டம் இன்றைக்கு நிறைவேறியிருக்கிறது. திமுக அரசு அமையும்போதுதான் இத்தகைய திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படும் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். கலைஞர் 1996-ல் முதலமைச்சராக இருந்த நேரத்தில் சென்னை மேயராக நான் பொறுப்பேற்றபோது, பல உறுதிமொழிகளை அதிலும் குறிப்பாக சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவதற்கான உறுதிமொழி எடுத்தேன். அதையெல்லாம் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டது. ஆனால் பின்னால் வந்தவர்கள் எப்படி சீரழித்தார்கள் என்பது எல்லாம் உங்களுக்குத் தெரியும். எனினும், சிட்டிபாபு பெயரில் இன்றைக்கு இந்த பாலம் அமைந்திருப்பது என்பது அது மக்களுக்கு பயன்படப்போகிறது என்பதை எண்ணிப்பார்த்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை மறந்திருக்க மாட்டீர்கள். செம்பரம்பாக்கம் ஏரித் தண்ணீரை உரிய முறையில் திறந்துவிடாத காரணத்தினால், யாருடைய உத்தரவுக்காக காத்திருந்த காரணத்தினால், அந்த உத்தரவை பெறமுடியாத சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த காரணத்தினால் சென்னை மாநகரத்தில் செயற்கை வெள்ளமே ஏற்பட்டது. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் நடந்திருக்கக்கூடிய ஊழல்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும்.
அதனால் சென்னையின் பல பகுதிகளில் மழையில் மிதந்தது. ஆனால், இப்போது கடந்த இரண்டாண்டு காலமாக திராவிட மாடல் ஆட்சியில் சென்னை எப்படி மாறியிருக்கிறது என்பதை நீங்கள் கண்கூடாக பார்க்கிறீர்கள். ஸ்மார்ட் சிட்டி பணிகள் எல்லாம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்னும், சில பணிகள் மீதம் இருக்கிறது. உடனடியாக அந்தப் பணிகளை எல்லாம் இன்னும் வேகப்படுத்தி, விரைவில் முடித்து சென்னை மக்கள் எந்த மழை வந்தாலும், எந்த புயல் வந்தாலும், எங்களுக்கு கவலையில்லை, நாங்கள் தைரியமாக இருக்கிறோம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு தரவேண்டும்.
நான் மேயராக பொறுப்பேற்றபோது, கலைஞர் ஒரு கருத்தைச் சொன்னார். நான் மேயர் பதவி ஏற்கப்போகிறேன் என்று தலைவரிடத்தில் சொன்னபோது, ஒரு திருத்தம், மேயர் பதவி என்று சொல்லாதே, மேயர் பொறுப்பென்று சொல் என்று சொன்னார். சொல்லிவிட்டு சொன்னார், ஏன் பொறுப்பு என்று சொன்னேன் என்றால், மக்கள் உனக்கு தந்திருப்பது பதவி அல்ல, பொறுப்பு. எனவே பொறுப்போடு இருந்து உன் கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்று அறிவுரையாக எனக்கு வழங்கிய அந்த வார்த்தைதான் எனக்கு எப்போதும் நினைவில் இருக்கிறது.
நான் அதைத்தான் தொடர்ந்து அமைச்சர்களிடத்திலும், அதிகாரிகளிடத்திலும் தொடர்ந்து நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆகவேதான் இந்த நிகழ்ச்சியிலும் இதை எடுத்துச் சொல்கிறேன்.
இந்தப் பாலத்தை 10 வருடமாக கஷ்டப்பட்டு கட்டிமுடித்தோம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, இப்பாலம் இப்போது எப்படி கம்பீரமாக அழகோடு காட்சியளிக்கிறதோ, தொடர்ந்து கடைசிவரையில், மக்கள் அதை நிம்மதியாக பயன்படுத்தக்கூடிய வகையில் இதே அழகோடு, பொலிவோடு இருக்க வேண்டும். இந்தப் பாலம் காலம் கடந்து கட்டப்பட்டிருந்தாலும், ஒரு சினிமாவில் சூப்பர் ஸ்டார் சொல்லுவதைப்போல, லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்-ஆக வந்திருக்கிறது. அதுமாதிரி கொஞ்சம் லேட்டாக இருந்தாலும், லேட்டஸ்ட்-ஆக நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள். அதை நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.