புதுடெல்லி: மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற காங்கிரஸுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவையான நிலையில் 123 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
பாஜக இதுவரை 51 இடங்களில் வெற்று பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கர்நாடக தேர்தலில் எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பாஜக கட்சி தொண்டர்களின் கடின உழைப்பை நான் பாராட்டுக்கிறேன். இனி வரும் காலங்களில் கர்நாடகாவிற்கு இன்னும் பலத்துடன் பணி செய்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.